நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்தநிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு தண்ணீர் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தின் நடிகர்கள் பலர் கட்சி ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில் அவரும் கட்சி தொடங்கியுள்ளார். எனவே எனது வாழ்த்துக்கள்.
புஸ்ஸி ஆனந்த் பற்றி நிறைய விஷயங்கள் வருகிறது. அவர் புதுச்சேரியில் உள்ள பாஜக தலைவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. விஜய், தான் ஏ டீம், பி டீம் இல்லை என சொல்வதை வைத்து பார்க்கும் போது சந்தேகம் ஏற்படுகிறது.
திமுக குறித்து பணம் சம்பாதிப்பதாக சொல்லி இருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கும் போது இந்த வார்த்தையை அவர் தவிர்த்து இருக்கலாம். புஸ்ஸி ஆனந்த் கிரிமினல் என விஜயின் தந்தையே சொல்லி இருக்கிறார். எனவே ஒரு கிரிமனலை எப்படி அக்கட்சியின் பொதுச் செயலாளராக என்று தெரியவில்லை. ஒருவேளை கிரிமினல் இப்போது நல்ல ஆளாக மாறிவிட்டாரா? என்னவோ நடிகர் விஜய் வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய போது குற்றவாளியை போல் வருமானவரித்துறை காரில் அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு ஆதரவாக திமுக தான் குரல் கொடுத்தது.
குற்றம் இருப்பதால்தான் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். எனவே ஒருவர் மற்றவர்களை குறை சொல்லும் போது தான் உண்மையாக இருக்க வேண்டும். ஏற்கனவே பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர முயற்சித்தார்கள், அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக விஜயை ஏற்பாடு செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. தி.மு.க அரசு பல நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 75 ஆயிரம் வருடங்கள் டிஎன்பிசி மூலம் நிரப்பப்பட இருக்கிறது. எனவே இந்த அரசு எத்தனை விமர்சனங்கள் செய்தாலும் தாங்க கூடிய அரசாக மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படும்" என்று கூறினார்.