இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை (6th schedule), பழங்குடி மக்களின் பகுதிகளை தன்னாட்சிப் பகுதிகளாக நிர்வகிக்கும் உரிமையை வழங்கிறது.
அதன்படி, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள சுமார் 10 மாவட்டங்கள், தன்னாட்சி உரிமைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்திய நிலப்பரப்பின் வடமுனையில் இருக்கும் லடாக் பகுதியிலும் தன்னாட்சி உரிமைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது லடாக் மக்களின் நீண்டகால கோரிக்கையாக அமைந்துள்ளது.
அது சார்ந்த போராட்டங்களும், லடாக்கில் பல முறை அரங்கேறியுள்ளன. இதனைத் தொடர்ந்து, இந்திய தலைநகரிலும் பேரணி நடத்த லடாக் மக்கள் முடிவு செய்திருந்த நிலையில், டெல்லி எல்லையிலேயே அவர்களை தடைப்படுத்தி, கைது செய்துள்ளது டெல்லி காவல்துறை.
இதில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். 80 அகவையைக் கடந்தவர்களும் கைது செய்யப்பட்டவர்களில் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “லடாக்கின் உரிமைகளுக்காக சோனம் வாங்சுக் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான லடாக் மக்கள் அமைதி முறையில் டெல்லியில் பேரணி நடத்தியபோது, அவர்களை தடைப்படுத்தி, காவலில் வைத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. லடாக்கின் உரிமைக் குரல் கேட்கப்பட வேண்டும். இல்லையென்றால், ஒன்றிய அரசின் அரக்கத்தனம் நிச்சயம் உடையும்” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மோடி அரசு, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அமைதி முறையில் போராட்டம் செய்த லடாக் மக்களை வஞ்சித்துள்ளது. இது ஜனநாயக முறைக்கு முற்றிலும் எதிரான நடவடிக்கை. உரிமை கோருவது மக்களின் உரிமை” என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, “நாட்டை நேசிக்கும் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் போன்றவர்களை ஒன்றிய பாஜக அரசு பயங்கரவாதிகள் போல் கருதுகிறது. ஆனால் அதேவேளையில், குண்டர்களுக்கு பாஜக முழுமையான பாதுகாப்பை அளிக்கிறது. சோனம் வாங்சுக்கிற்கு எதிராக பாஜக பயன்படுத்தும் சக்தியை டெல்லி ரவுடிகளுக்கு எதிராக பயன்படுத்தாதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.