ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் அங்கு நடந்த ஆட்சியை பாஜக கவிழ்த்த நிலையில், ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. இதனை சாதகமாக வைத்து காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீரில் இருந்து லடாக் தனியே பிரிக்கப்பட்டது.
அதோடு ஜம்மு காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டமும் பறிக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் , லடால் இரண்டும் தனித்தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறாத நிலை நிலவி வருகிறது.
ஒன்றிய பாஜக அரசின் இந்த செயலை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே லடாக்கிற்கு என்று தனி மாநில உரிமை, தன்னாட்சி உரிமை என பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தி அங்கு கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் காந்தி நினைவிடம் சென்று போராட்டம் நடத்த லடாக் போராட்டக் காரர்கள் திட்டமிட்டிருந்தனர். அந்த வகையில் டெல்லியை நோக்கி நடைபயணம் சென்ற சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஹனீபா போன்றவர்கள் நேற்று இரவு சிங்கு எல்லையில் கைது செய்யப்பட்டனர்.
இதனை கண்டித்து இன்று லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அங்கு 90 சதவீத கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் லடாக்கில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.