கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க, இந்திய அளவில் வேலைவாய்ப்பு முடக்கத்தையும், வன்முறையையும், பெண்ணடிமைத் தனத்தையும், சிறுபான்மையினர் ஒடுக்குமுறையையும் மற்றும் பல திணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வது போல, 10 ஆண்டுகளாக அரியானா மாநிலத்தையும், அம்மாநில மக்களையும் வஞ்சித்து வருகிறது பா.ஜ.க.
குறிப்பாக சுமார் 3.09 கோடி மக்கள் வாழும் அரியானாவில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு CMIE வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவிலேயே வேலைவாய்ப்பின்மை அதிகம் உள்ள மாநிலம் அரியானா என்றும், இது தேசிய அளவிலான வேலைவாய்ப்பின்மையில் 37.4% என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னடைவு, வேலைவாய்ப்பில் மட்டுமல்லாது, கல்வி, சுகாதாரம், உணவு உள்ளிட்டவையிலும் நீடித்து வருகிறது. மேலும், விவசாயிகள் மீதான ஒடுக்குமுறை அதிகம் காணப்படும் மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கி வருகிறது.
இது போன்ற சூழலால், அரியானா மக்களின் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது அரியானா மாநில பா.ஜ.க. இதற்கிடையில் கட்சியில் உட்கட்சி பூசலும் அதிகரித்து வருகிறது.
அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.க.வில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பா.ஜ.க வேட்பாளர்களை எதிர்த்து தன்னிச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 8 பா.ஜ.க நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சி முன்மொழிந்திருக்கும், சமூக நீதி சார்ந்த வாக்குறுதிகளும், வளர்ச்சி நோக்கிய வாக்குறுதிகளும், அரியானா மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.