ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வர முயல்கிறது. இதனை கொண்டு வருவதன் மூலம் பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் ஆட்சி கலைப்பு செய்ய பா.ஜ.க முயற்சிக்கிறது.
கடந்த ஆண்டு பா.ஜ.க ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் கடும் எதிரப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு, ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்தது.
இந்த குழுவிற்கு காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதங்களை அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தனது ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசிடம் வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஆய்வு குழுவின் அறிக்கைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த பா.ஜ.க முயற்சி செய்வது தெளிவாகியுள்ளது. மேலும், எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.