பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்-ன் இந்துத்துவவாத அரசியல், ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளும், கடுமையான தாக்குதல்களும் மேலோங்கி வருகின்றன.
அவ்வகையில், ராமர் கோவில் திறப்பின் போது சாலைகளில் சென்ற இஸ்லாமியர்களை வலுக்கட்டாயமாக “ஸ்ரீ ராம ஜெயம்” என முழங்கக்கூறியும், முழக்கமிட மறுத்தால் தடியடி நடத்தியதும், தேசிய அளவில் சர்ச்சையானது.
இதனிடையே, இஸ்லாமியர்களைக் கண்டாலே வெறுப்பு உமிழும் தன்மையும் இந்தியாவின் பல பகுதிகளில் அரங்கேறி வருவது, ஒவ்வொரு நாளும் இணையத்தில் பதைபதைக்கும் காணொளிகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதன் ஒரு பங்காக, நேற்றும் (31.8.24) மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஹஜி அஷ்ரஃப் முன்யார் என்ற இஸ்லாமிய முதியவர், தனது மகளுக்காக மாட்டிறைச்சி எடுத்துச்சென்ற காரணத்திற்காக சுமார் 10 குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.
அக்காணொளி இணையத்தில் வெகுவாக பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர், இச்சம்பவத்தை குறிப்பிட்டு தங்களது எதிர்ப்புகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், முதியவரை தாக்கிய குண்டர்கள் மீது 115 (2), 126(2) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ், மகாராஷ்டிர காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இச்சம்பவம் 28 ஆகஸ்ட் அன்று நடைபெற்றதும் அம்பலமாகியுள்ளது.