குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே கல்வி, அரசு வேலைகளில் இடம்பெறுகிறார்கள் என்பதால் நாட்டில் இடஒதுக்கீடு முறை பல போராட்டங்களுக்கு பின்னர் அமல்படுத்தப்பட்டது. ஆனால் சிலர் சாதிய பாகுபாட்டை நீக்கி சமத்துவத்தை கொண்டு வரவே இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது என்பதை மறைத்து இடஒதுக்கீட்டால்தான் சாதி இருக்கிறது என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
அதிலும் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இடஒதுக்கீடுக்கு எதிரான கருத்து தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. அதோடு அரசின் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு நேரடியாகவும், மறைமுகமாகவும் பறிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது UPSCயில் SC,ST,OBC இடஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற திமுக உறுப்பினர் பி.வில்சன் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில் , "ஆட்சேர்ப்பு செயல்முறையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற அரசியல் சாசன உத்தரவை யு.பி.எஸ்.சி., எப்படி புறக்கணித்துள்ளது என்பதற்கு யு.பி.எஸ்.சி., இன்று வெளியிட்டுள்ள பின்வரும் விளம்பரம் ஒரு சிறந்த உதாரணமாகும்..
பதவிகளுக்கான எந்த இட ஒதுக்கீடும் வழங்காமல், 10 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குனர் / துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒன்றிய அரசு ஊழியர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது!
சாதாரணமாக இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடும்போது, மொத்தமுள்ள 45 இணைச் செயலாளர் மற்றும் இயக்குநர் / துணை செயலாளர் பதவிகளில் குறைந்தது 22-23 விண்ணப்பதாரர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்சி / எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.இது அரசியல் சாசனத்தை மீறும் செயல் இல்லையா?
மாண்புமிகு பிரதமர் அவர்களே, நீங்கள் இந்த சட்டவிரோதமான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சேர்ப்பு செயல்முறையை தொடரப் போகிறீர்களா அல்லது அரசியல் சட்ட இடஒதுக்கீட்டு முறையை செயல்படுத்தி புதிய நியமனத்திற்கு அழைப்பு விடுக்கப் போகிறீர்களா?"என்று கூறப்பட்டுள்ளது.