MUDA எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், முறைகேடுகள் நடந்துள்ளதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த விவகாரத்தை அடுத்து அம்மாநில காங்கிரஸ் அரசு மீது பாஜக கடும் விமர்சனத்தை முன்வைத்தது. அதாவது MUDA-வில் முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தனது மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே இந்த மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா விளக்கமளித்தார். எனினும் இந்த விவகாரத்தை பாஜகவினர் பூதாகரமாக்க முயன்று வருகின்றனர். அங்கங்கே ஆர்ப்பாட்டம் என பல விஷயங்களை செய்து வருகிறது பாஜக.
மேலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் பாஜக தலைவர்கள் முறையிட்டனர். இந்த சூழலில் 'MUDA' விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் அனுமதியளித்துள்ளார். ஆளுநரின் இந்த உடனடி அனுமதியின் பின்னணியில் சதி இருப்பதாக காங்கிரஸ் அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றி வருவதை பாஜகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நிலமோசடி விவ்காரத்தில் தன்மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி அளித்திருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ஆளுநரின் இந்த செயலுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தப்படும்.
பாஜக மற்றும் அதன் கூட்டணியான JD(S) கட்சி, ஒன்றிய அரசு உள்ளிட்டவை இணைந்து இந்த ஆட்சியை கவிழக்க சதி செய்கிறது" என்றார். ஏற்கனவே ஆளுநர் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை கவிழக்க ஒன்றிய பாஜக அரசு சதி செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.