நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன் ஒன்றிய பா.ஜ.க அரசால், முன்மொழியப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்ற பல நிதி பகிர்வை, தற்போது திரும்பப்பெற்றுள்ளது ஒன்றிய பா.ஜ.க. இதனை விமர்சித்து, தனது X தளத்தில் பதிவிட்ட சு. வெங்கடேசன்,
“நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுபெற்ற பின் இன்று ரயில்வே திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான பிங்க் புத்தகம் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு அப்பட்டமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ. 976 கோடி ஒதுக்குவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், இன்று வெளியிடப்பட்டுள்ள பிங்க் புத்தகத்தில் அத்தொகை ரூ. 301 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இரட்டைப்பாதை திட்டங்களுக்கு ரூ 2,214 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ரூ. 1,928 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய வழித்தடங்களான திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை வழித்தடத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்திப்பட்டு - புத்துருக்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் - நகரிக்கு ரூ. 350 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது 153 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு - பழனிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை- மகாபலிபுரம் - கடலூர் கடற்கரை பாதைக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்போது வெறும் ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி - இருங்காட்டுக்கோட்டை - ஆவடி லைனுக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மொரப்பூர் - தர்மபுரிக்கு ரூ.115 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ரூ.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல இரட்டை பாதை திட்டங்களில் காட்பாடி - விழுப்புரத்துக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சேலம் -கரூர்- திண்டுக்கல் இரட்டை பாதைக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு -கரூர் இரட்டை பாதைக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டில் வந்த பிங்க் புத்தகத்தில் ரூ. 350 கோடி, ரூ. 150 கோடி என்று ஒதுக்கியது வெறும் தேர்தலுக்காக தான். உண்மையான பிங்க் புத்தகம் வந்த பிறகு தான் அது வெட்ட வெளிச்சமாகும் என்று நான் நாடாளுமன்றத்திலேயே கூறினேன். இப்போது உண்மை வெளிவந்து விட்டது.
பொது பட்ஜெட் முடிந்ததும் வெளியிடப்பட வேண்டிய இரயில்வே பிங்க் புத்தகத்தை வெளியிடாமலே மோடி அரசு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்தது.
இடைக்கால பட்ஜெட்டில் தேர்தலுக்காக இவர்கள் செய்த போலி அறிவிப்புகள் நாடாளுமன்ற விவாதத்தின் வழியே நாட்டுமக்களுக்கு தெரிந்துவிடும். இவர்களின் போலி அரசியல் அம்பலமாகிவிடும் என்பதால் இவர்கள் பிங்க் புத்தகத்தையே வெளியிடாமல் விவாதத்தை நடத்தி முடித்தனர்.
பொது பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் அப்பட்டமான துரோகத்தை செய்த மோடி அரசு ரயில்வே திட்டங்களிலும் அதே துரோகத்தை அரங்கேற்றியுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதியும் பறிக்கப்பட்டது. பிங்க் புத்தகம் வெளியிடாமல் அது சார்ந்த உண்மையும் மறைக்கப்பட்டது. அதன் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற வேண்டிய விவாதமும் பறிக்கப்பட்டது. மோடி அரசு தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகத்தின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது.
இது சம்பந்தமாக நான் குற்றச்சாட்டை முன்வைத்த போது எனக்கு எதிராக பேசிய பாஜக தலைவர்கள் வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் இப்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்?
பொதுபட்ஜெட்டில் சென்னை மெட்ரோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இப்பொழுது ரயில்வேயின் புதிய வழித்தடங்கள் அனைத்துக்கும் இழைக்கப்பட்டுள்ளது. இந்த அநீதிக்கு எதிரான எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.