2022ஆம் ஆண்டு, அதானியின் பங்குகளில் பல்வேறு முறைகேடுகள் இருக்கின்றன என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க் பல்வேறு சான்றுகளுடன் வெளிப்படுத்தியது. இதனால், அப்போதைய அளவில் பெரும் சர்ச்சை எழுந்தது. அதானி குழுமம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அதானி குழுமம் “மீது தீவிர விசாரணை வேண்டும்” என எதிர்க்கட்சிகள் முன்மொழிந்தன. எனினும், அதானிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தது ஒன்றிய பா.ஜ.க அரசு.
அதனைத் தொடர்ந்து, தற்போது சுமார் 18 மாதங்களுக்கு பின், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், “அதானி மோசடி குறித்து விசாரிக்கும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) தலைவரும் அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர் தான்” என்ற மற்றொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
எனவே, தற்போதாவது ஒன்றிய பா.ஜ.க, வேறு வழியின்றி அதானி குழுமத்திற்கு எதிரான சான்றுகளை ஆராய்ந்து, உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், சற்றும் எதிர்பாராத நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது ஒன்றிய பா.ஜ.க.
அவ்வெதிர்பாராத நடவடிக்கைக்கையின் முன்னெடுப்பாக, அதானி - செபி மோசடியை வெளிக்காட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லாமல் சொல்லிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் சர்ச்சை பேச்சு அமைந்துள்ளது.
ஒன்றிய பா.ஜ.க அரசின் நேரடி உதவியாலும், அரசு உடைமைகளை தன்வசப்படுத்தியதாலும், அதானி அடைந்த உச்சம், whistleblower-களால் (மறைமுகமாக நிகழும் சட்டவிரோத செயல்களை வெளிப்படுத்துவோர்) அம்பலப்படுவதால், கடும் சினத்திற்குள்ளாகி உள்ளது அதானி குழுமம் என்றால், அதற்கு ஒரு படி மேல் சென்று எதிர்வினைகளை தொடங்கியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு என்பதே இதன் வழி வெளிச்சமாகியுள்ளது.
அவ்வெளிப்பாடாக, நேற்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பேட்டியில், “இந்திய பொருளாதாரத்தை சிதைக்க, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலைகள் நடக்கின்றன. இதில் பங்கு கொண்டிருக்கும் காங்கிரஸார் மீதும், அவரது கூட்டத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற சர்ச்சை கருத்தை முன்வைத்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, “ஒன்றிய பா.ஜ.க அரசு, வழக்கத்திற்கு மாறான அரசாக இருக்கிறது. தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், “தவறு செய்துள்ளனர்” என குற்றம் சாட்டுபவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கின்றனர். இவர்கள், எதை மறைக்கப்பார்க்கிறார்கள்? யாரை பாதுகாக்க எண்ணுகிறார்கள்?” என கண்டனத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.