இந்தியாவின் எல்லைப்பகுதியைச் சீனா தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகிறது. குறிப்பாக 2014 ஆண்டு பா.ஜ.கவின் ஆட்சிக்கு பிறகே அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப்பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதும் பதட்டமான சூழ்நிலையே இருந்து வருகிறது.
இந்த ஆக்கிரமிப்பு அத்து மீறலை ஒன்றிய பா.ஜ.க அரசு தட்டிக் கேட்காமல் மவுனமாக இருந்து வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பு எதுவும் நடைபெறவில்லை எனவும் பா.ஜ.க அரசு பொய் சொல்லி வருகிறது.
மேலும், அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு உட்பட்ட 30 இடங்களின் பெயரை சீனா தன்னிச்சையாக அண்மையில் மாற்றியது. புதிய பெயரில் சீன எழுத்துகள், திபெத்தியன், பின்யின், மாண்டரின் சீனத்தின் ரோமானிய எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அப்படி ஒன்றும் பெயர்கள் மாற்றப்படவில்லை என ஒன்றிய பா.ஜ.க அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
இப்படி தொடர்ச்சியாக சீனாவின் ஆத்துமீறலை ஒன்றிய பா.ஜ.க அரசு வேடிக்கைப் பார்த்து வருகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பை பிரதமர் மோடி தாரை வார்த்து வருவதாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”சீனா அத்துமீறி இந்திய நிலப்பரப்பை பிடித்திருக்கும் விஷயம் குறித்து G7 நாட்டுத் தலைவர்களிடம் மோடி சொல்லவில்லை என ஐரோப்பாவில் இருக்கும் சீனர்கள், செல்வாக்கு மிகுந்த நபர்களிடம் பெருமையுடன் சொல்லி கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலோ மோடி, ‘யாரும் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழையவில்லை’ எனக் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய பா.ஜ.க அரசையும், பிரதமர் மோடியின் நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாகவே சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.