அரசியல்

நீதிபதி சந்துரு மீது அண்ணாமலைக்கு கோவம் வர காரணம் இதுதான் - செல்வப்பெருந்தகை விமர்சனம் !

நீதிபதி சந்துரு மீது அண்ணாமலைக்கு கோவம் வர காரணம் இதுதான்  -   செல்வப்பெருந்தகை விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ள நிலையில், அவருக்கு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் :

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாங்குநேரியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு பட்டியலின மாணவர்களை பிற சமூக மாணவர்கள் தாக்கியதையடுத்து கல்வி நிலையங்களில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது அறிக்கையை கடந்த மாதம் ஜூன் 18 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்தது. அதன் பரிந்துரைகள் ஊடகங்களில் வெளிவந்தன.

இதுகுறித்து கருத்து கூறிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனிப்பட்ட முறையில் நீதிபதி சந்துரு அவர்களை ‘சுய லாபத்துக்காக அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு, மக்களின் வரிப் பணத்தில் தி.மு.க.வின் கொள்கைகளை அறிக்கையாக சமர்ப்பித்ததை விட தி.மு.க.வில் சேர்ந்து கொள்கை பரப்பு செயலாளர் ஆகிவிடலாம்” என்று விஷமத்தனமான ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

நீதிபதி சந்துரு மீது அண்ணாமலைக்கு கோவம் வர காரணம் இதுதான்  -   செல்வப்பெருந்தகை விமர்சனம் !

நீதிபதி சந்துரு மீது அண்ணாமலைக்கு கோபம் வருவதற்கான காரணங்களை அனைவரும் அறிவார்கள். நீதியரசர் சந்துரு அவர்களை பொறுத்தவரை தமது 17-வது வயதில் மாணவ பருவத்திலேயே 1968 ஆம் ஆண்டில் கீழ்வெண்மணியில் 44 தாழ்த்தப்பட்ட மக்கள் தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்ட போது அதற்காக நீதி கேட்டு குரல் கொடுத்து போராடியவர். 1976 இல் வழக்கறிஞராக தொழிலை தொடங்கும் போதே தொழிலாளர் நலன், உரிமை சார்ந்த வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டவர். மக்களின் உரிமைகளை பறிக்கிற வழக்குகளில் தொழில் ரீதியான எந்த கட்டணத்தையும் பெறாமல் நீதிமன்றத்தில் வாதாடிய பெருமை அவருக்கு உண்டு. பொதுநல வழக்குகள், மனித உரிமை வழக்குகள், பெண்ணுரிமைக்கான வழக்குகள் என அனைத்திலும் சமூக உணர்வோடு பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடியவர்.

இவரது வழக்கறிஞர் தொழிலின் நேர்மையான அர்ப்பணிப்பு உணர்வின் அடிப்படையில் 2006 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். ஏறத்தாழ 90,000 வழக்குகளில் தீர்ப்பு வழங்கி சாதனை படைத்திருக்கிறார். அனைத்து வழக்குகளிலும் சமூக சிந்தனையும், அக்கறையும் கொண்டவராக தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். வழங்கப்பட்ட தீர்ப்புகளில் குறிப்பாக கோயில்களில் பெண்கள் பூசை செய்யும் குருக்கள் ஆகலாம், சாதி பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் ஒரே சுடுகாடு, கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழிபாட்டு உரிமை, சாதி, மத மறுப்பு திருமணங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை தகர்த்து உரிமைகளை நிலைநாட்டும் தீர்ப்புகள் வழங்கியது மற்றும் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலினத்தவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட சமூக உணர்வோடு, சமூக சமத்துவத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தீர்ப்புகளை வழங்கி, உரிமைகளை பெற்றுத் தந்து வரலாறு படைத்தவர்.

இந்திய மக்களுக்காக அனைவரையும் உள்ளடக்கிய இந்திய அரசமைப்புச் சட்டத்தை தயாரித்து வழங்கிய சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கொள்கைகளை நீதியரசராக மிகுந்த துணிவுடன் நடைமுறைப்படுத்தியவர். அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட அம்சங்களை பாதுகாக்கிற ஒரு போராளியாக வாழ்ந்தவர். அத்தகைய வரலாற்றுப் பெருமைகளை பெற்றிருக்கிற நீதியரசர் சந்துரு அவர்களை பாசிச போக்கு கொண்ட அண்ணாமலை விமர்சனம் செய்வதற்கு எந்த அருகதையும் இல்லை. கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்து, நான் கன்னட மக்களுக்காகத் தான் பேசுவேனே தவிர, நான் சார்ந்த தமிழர்களுக்காக பேச மாட்டேன் என பகிரங்கமாக மேடையில் பேசிய தமிழின விரோதி தான் அண்ணாமலை. தமிழக பா.ஜ.க. கட்சியில் சேர்ந்தவுடனேயே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி கண்டவர் பதவி உயர்வு பெற்று மாநில தலைவரானது தமிழக பா.ஜ.க.வின் சாபக் கேடாகும்.

நீதிபதி சந்துரு மீது அண்ணாமலைக்கு கோவம் வர காரணம் இதுதான்  -   செல்வப்பெருந்தகை விமர்சனம் !

தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்ப்பதில் காட்டுகிற அக்கறையை விட தனக்கு அடுத்த நிலையில் நீண்டகாலமாக முன்னணித் தலைவர்களாக இருந்த அனைவரையும் ஓரம்கட்டி ஒழித்து விடுவதில் வெற்றி பெற்றிருக்கிறார். இதன்மூலம் பா.ஜ.க.வை குழிதோண்டி புதைத்து வருகிறார். நீதியரசர் உள்ளிட்ட எவர் மீதாவது அவதூறு சேற்றை நாள்தோறும் வாரி இறைத்து அதன்மூலம் ஊடக வெளிச்சம் பெற்று பரபரப்பு அரசியலை செய்து வருகிறார். கடந்த காலங்களில் இத்தகைய அரசியலை மேற்கொண்டவர்கள் படுகுழிக்கு தள்ளப்பட்டதை அண்ணாமலைக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.

கல்வி நிலையங்களில் சாதி, மத, உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டு வன்முறை வெறியாட்டத்தின் காரணமாக கடுமையான மோதல்கள் கடந்த காலங்களில் ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள். இளமை பருவத்தில் கல்வி பயில வருகிற மாணவர்களுக்கு மானுட அறத்தையும், அறிவையும் வளர்க்கிற வகையில் பாட திட்டங்களில் சமூக, சமத்துவம் சார்ந்த கருத்துகள் இடம் பெறுகிற வகையிலும், அறநெறி வகுப்புகள் வாரந்தோறும் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பொது சமூக உணர்வோடு போதிக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் சாதி அடையாளங்கள் மூலம் மாணவர்களிடையே வேற்றுமையை வளர்க்கக் கூடாது என பரிந்துரைகள் வழங்கப்பட்டது. அத்தகைய அடையாளங்கள் கல்வி அறிவை வளர்ப்பதற்கு எந்த வகையிலும் உதவிடாது என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட நீதிபதி சந்துரு வழங்கிய அறிக்கை குறித்து விவாதிப்பதில் தவறில்லை. ஆனால், அறிக்கை வழங்கிய நீதிபதி சந்துருவுக்கு உள்நோக்கம் கற்பிப்பித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை அண்ணாமலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். சந்துரு அவர்கள் நீதியரசராக இருந்து வழங்கிய தீர்ப்புகளின் கருத்துகளின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட ‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” என்ற புத்தகத்தை தபால் மூலமாக அனுப்புகிறேன். அந்நூலை அண்ணாமலை படித்து நீதிபதி சந்துரு அவர்களை பற்றி முழுமையாக புரிந்து கொண்டு கருத்துகளை கூற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories