18 ஆவது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதிவயேற்றனர். பின்னர் இருஅவைகள் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும் ஒன்றிய பா.ஜ.க அரசையும் கடுமையாக விமர்சித்து 1 மணி நேரத்திற்கு மேல் உரையாற்றினார்.
இந்நிலையில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, பூபேந்தர் யாதவ், கிரண் ரிஜீஜு, ஆகியோர் சபாநாயகரை சந்தித்து ராகுல் காந்தியின் உரை மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பிரதமர் மோடி குறித்தும், கடவுள், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ராகுல் பேசிய சில உரைகள் அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டி கொடுத்த ராகுல் காந்தி, ”மோடி அரசு எவ்வளவு விரும்புகிறதோ அவை அனைத்தையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கிக்கொள்ளட்டும். அவைக் குறிப்பிலிருந்து தனது பேச்சை நீக்குவதால் உண்மை மாறிவிடாது.” என ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.