நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின், தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின், மாநிலங்களவை, மக்களவை என இரு அவைகளிலும் நீட் மோசடி குறித்து தனி விவாதம் வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தினர்.
எனினும், அதற்கு முதலில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் இருக்கிறது, ஆகையால், நீட் விவாதம் முடியாது என மழுப்பிவிட்டு, தற்போது அட்டவணைப்படுத்தப்பட்ட நாளுக்கு, ஒரு நாள் முன்னதாகவே, தேதி குறிப்பிடாமல் மக்களவையை, சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தது சர்ச்சையாகியுள்ளது.
குறிப்பாக, மக்களவை கூட்டதொடரின் இறுதி நாளில், சுமார் 2 மணிநேரம் பேசிய மோடி, உண்மையில் இல்லாத பல செய்திகளை அவையில் முன்வைத்தார்.
இராணுவத்தில் நிலையான பதவிமுறையையே நீக்கிவிட்டு, இராணுவ வலிமையை சீர்குலைக்கும் அக்னிவீர் போன்ற திட்டங்களை செயல்படுத்தி விட்டு, இராணுவ படைபலத்தை மேலும் வலிமை படுத்தி வருகிறோம் என பேசினார். ஜனநாயகத்தில் அமைதி நிலவுவதாகவும் தெரிவித்தார்.
இதனால், சற்று எரிச்சலுக்கு உள்ளான எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள், மணிப்பூருக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் முழக்கமிட்டனர்.
குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி மக்களவை உறுப்பினர்கள், “கொல்லாதே... கொல்லாதே... ஜனநாயகத்தை கொல்லாதே!,” “வேண்டும்... வேண்டும்... மணிப்பூருக்கு நீதி வேண்டும்!” மற்றும் “வேண்டாம்... வேண்டாம்... நீட் தேர்வு வேண்டாம்!” என தமிழில் முழக்கமிட்டனர்.
எனினும், தேசிய சிக்கல்களை வழக்கம் போல புறந்தள்ளி, இறுதி வரை நீட் மோசடி குறித்து பேசாமல், பல பொய் பரப்பல்களை முன்வைத்து, தனது உரையை முடித்துக்கொண்டார் மோடி.
இது குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மனிஷ் திவாரி, “பிரதமர் மோடி, சீனா உடனான எல்லை சிக்கல் குறித்து பேசவில்லை, ஜம்முவில் தீவிரவாத தாக்குதல் குறித்து பேசவில்லை, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் மீது இருக்கிற குறைகள் குறித்து பேசவில்லை. மொத்தத்தில் முக்கியத்துவம் வாய்ந்த எந்த கருத்தும், பிரதமர் மோடியின் உரையில் இடம்பெறவில்லை” என தெரிவித்தார்.