நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. இதனிடையே பாஜகவினர் பிரசாரத்தின்போது, அரசியலமைப்பை மாற்றுவதே நோக்கம் என்ற வகையில் பேசி வந்தனர். தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பல்வேறு உண்மைக்கு புறம்பான பிரசாரங்களிலும் மோடி உட்பட பாஜகவினர் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து அரசியலமைப்பை பாதுகாப்பது நமது கடமை என்று எதிர்க்கட்சிகள், குறிப்பாக ராகுல் காந்தி பிரசாரத்தை மேற்கொண்டனர். அதிலும் ராகுல் தனது ஒவ்வொரு பிரசாரத்திலும் அரசியலமைப்பு சட்டத்தின் சிறிய புத்தகத்தையும் வைத்துக்கொண்டே பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இது மக்கள் மத்தியில் சிறந்த கவனத்தை பெற்றது.
இந்த சூழலில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கிய நிலையில், பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலரும் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் வைத்து எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மீதமிருக்கும் எம்.பி-க்கள் இன்று (ஜூன் 25) பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மக்களவையின் எதிர்க்கட்சி தலைவராக்க முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அளித்த பேட்டியில், "ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை முறைப்படியாக நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி தற்காலிக சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்." என்றார்.