உத்தர பிரதேசத்தில் முக்கிய கட்சிகளில் ஒன்றுதான் பகுஜன் சமாஜ் கட்சி. தலித் கட்சியாக அறியப்படும் இந்த கட்சி நாடு முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்த கட்சியின் தலைவராக இருக்கும் மாயாவதி, அம்மாநில முன்னாள் முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.
இந்த சூழலில் இவர், தனது சொந்த மருமகனான ஆனந்த் ஆகாஷை தனது அரசியல் வாரிசாகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நியமித்து அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரசாரத்திற்கான தலைவர்கள் பட்டியலில் ஆகாஷ் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இதனால் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொண்ட ஆனந்த் ஆகாஷ், பிரசாரத்தின்போது ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தனது கருத்தை வலுவாக முன்வைத்தார். மேலும் ஒன்றிய பாஜக அரசை பயங்கரவாதிகள் என்றும், ஆப்கானின் தலிபான் ஆட்சிபோல் பாஜக ஆட்சி இருப்பதாகவும் பிரசாரத்தில் பேசினார்.
இதனால் ஆனந்த் ஆகாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆகாஷின் பேச்சுக்கு பாஜகவினர் மத்தியிலும் கண்டனங்கள் வலுத்தது. இதையடுத்து ஆனந்த் ஆகாஷுக்கு அரசியல் பக்குவம் போதவில்லை என்று, அவரை கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கினார் மாயாவதி. பின்னர் இது பலர் மத்தியிலும் விமர்சனங்களை எழுப்பியது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் நாடு முழுவதும் பகுஜன் சமாஜ் தன்னிச்சையாக போட்டியிட்டது. அவ்வாறு போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி அழைப்பு விடுத்தும் மாயாவதி உடனிணைய மறுத்தார். அவ்வாறு தன்னிச்சையாக உ.பி-யில் போட்டியிட்டதால், இந்தியா கூட்டணிக்கு 16 இடங்களில் தோல்வி கிடைத்துள்ளது.
மொத்தமாக மாயாவதி வெளியில் பாஜகவுக்கு எதிராக பேசி, உள்ளே மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளது இதன்மூலம் அம்பலமாகியுள்ளது. பாஜகவின் இந்த மறைமுக ஆதரவால் உத்தர பிரதேசத்தில் பாஜக குறிப்பிட்ட 16 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளது. இது பகுஜன் சமாஜுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இது பகுஜன் சமாஜுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு குறைந்து வருவதை காட்டுகிறது. இந்த சூழலில் தற்போது பக்குவம் பத்தாது என்று கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கிய தனது மருமகன் ஆனந்த் ஆகாஷுக்கு மீண்டும் பதவி கொடுத்துள்ளார் மாயாவதி.
அதன்படி ஆனந்த் ஆகாஷ் மீண்டும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், அரசியல் வாரிசாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அங்கு காலியாக உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெறுகிறது; ஜூலை 13 வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.