பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தான் ஆள்மாறாட்டம், தேர்வு நடத்தைகளில் முறைகேடுகள் அதிகளவில் கண்டறியப்படுகிறது என்றால்,
தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் தேர்வுகளிலும் முறைகேடுகளுக்கு பஞ்சமில்லாத சூழல் உருவாகியுள்ளது.
அதிலும், ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் தேர்வுகளிலேயே, தற்போது முறைகேடுகள் அதிகரிப்பது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அவ்வாறு நடப்பாண்டில், ஒன்றிய பா.ஜ.க அரசின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட, நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு (NEET), ஒன்றிய பல்கலைக்கழங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு (CUET), உதவிப் பேராசிரியர்/ ஆராய்ச்சி மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு (NET) என மூன்று தேர்வுகளிலும் முறைகேடுகள் அரங்கேறியது, ஒன்றிய பா.ஜ.க.வின் அலட்சியத்தை வேறுபிரித்து காட்டியுள்ளது.
அதிலும் குறிப்பாக, நீட் தேர்வில், ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் இருக்கும் சூழலில், பல மாணவர்கள் தங்களது உயிர்களை மாய்த்துக்கொண்ட ஒரு நுழைவுத்தேர்வில், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்டவை அரங்கேறியதும், அதற்கு பல இலட்சம் பண பரிமாற்றம் செய்யப்பட்டதும் அம்பலமாகி, நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில், நீட் முறைகேடுகளுக்கே தீர்வுகாணப்படாத போது, பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தேசிய தகுதித் தேர்விலும் (NET) முறைகேடு நடந்தது அம்பலமாகி, தேர்வை ரத்து செய்துள்ளது ஒன்றிய கல்வித்துறை.
இதே நிலை தான், ஒன்றிய பல்கலைக்கழங்களுக்கான நுழைவுத்தேர்விற்கும் (CUET).
இது குறித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “ஒவ்வொரு ஆண்டும், மோடி தலைமையில் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து விவாதிக்கப்படாலும், முறைகேடுகள் இல்லாத தேர்வுகளை நடத்த முடியவில்லையே ஏன்?” என்றும்,
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “பாஜக அரசின் மெத்தனமும், ஊழலும் இளைஞர்களுக்குப் பேரிடியாக உள்ளது. நீட் தேர்வை தொடர்ந்து, ஜூன் 18ல் நடந்த நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற அச்சத்தால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தவறுகளுக்கு யார் காரணம் என்பது கண்டறியப்படுமா? கல்வி அமைச்சர் இதற்கு பொறுப்பேற்பாரா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், “யூஜிசி- நெட் (UGC-NET) தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் வினாத்தாள் கசிவு இயல்பாகி, அனைத்து தேர்வுகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலப்பட்டு வருவது திட்டமிட்ட சதிகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
எனினும், இதனை ஒரு பொருட்டாக எண்ணாது, தங்களது ஆகச்சிறந்த பணியான “புறக்கணிப்பு பணியை” சரியாக செய்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசின் தலைமை.