நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 292 இடங்களும், இந்தியா கூட்டணி 234 இடங்களும் கைப்பற்றின. இதில் தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக, கூட்டணி கட்சிகளோடு உதவியோடு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், மோடி 3-ம் முறையாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் பதிவியேற்பு விழா நடைபெற்றது.
அதனுடன் 30 கேபினட் அமைச்சர்களும், 36 இணையமைச்சர்களும், 6 தனி பொறுப்பு இணையமைச்சர்களுக்கு பதவியேற்றுக்கொண்டனர். மோடியின் அமைச்சரவையில் அவர் உள்பட மொத்தம் 72 அமைச்சர்கள் உள்ளனர். இந்த சூழலில் தற்போது ஒன்றிய இணையமைச்சர் ஒருவர், ஒன்றிய அரசின் திட்டத்தை பள்ளியில் தவறாக எழுதி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் தார் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தற்போது எம்.பியாக இருப்பவர்தான் சாவித்ரி தாகூர். இவர் தற்போது பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சராக உள்ளார். இந்த சூழலில் இவர் மத்திய பிரதேசத்தின் அவரது சொந்த தொகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் 3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றை துவங்கி வைக்க சென்றுள்ளார்.
அங்கே ஒன்றிய அரசின் பெண் குழந்தைகளுக்கான திட்டமான 'Beti Bachao, Beti Padhao' (பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) என்ற திட்டத்தை எழுத்துப்பலகையில் எழுதமுயன்றுள்ளார். ஆனால் இந்தியில் எழுதிய ஒன்றிய அமைச்சர் சாவித்ரி தாகூர், அதனை 'Beti Padao Bachav' என்று தவறாக எழுதியுள்ளார்.
ஒன்றிய அமைச்சரின் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ஒன்றிய இணையமைச்சராக இருக்கும் ஒருவருக்கு, ஒன்றிய அரசின் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தை சரியாக எழுத தெரியவில்லை என்று பலரும் கேலி செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்தே இவர் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படிந்துள்ளது தெரியவந்துள்ளது. தேர்தல் உறுதி பத்திரத்தில் தனது கல்வித்தகுதி, 12-ம் வகுப்பு என்று குறிப்பிட்டுள்ளார் சாவித்ரி தாகூர். இதையடுத்து வெறும் 12-ம் வகுப்பு படித்தவர், நாட்டின் ஒன்றிய அமைச்சரா என்றும், சரியாக ஒரு வரியை எழுத தெரியாதவர் பெரிய பதவிக்கு தகுதியுடையவரா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நாட்டு மக்கள் கல்வியறிவுள்ள தலைவர்களை எதிர்பார்க்கும் நிலையில், இப்படி ஒரு நிகழ்வு அனைவர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த காணொளி வைரலாகி அவருக்கு எதிராக பல்வேறு கருத்துகள் குவிந்து வருகிறது. ஒன்றிய அமைச்சருக்கு, ஒன்றிய அரசின் திட்டம் கூட சரியாக தெரியவில்லை என்று பலரும் கேலி செய்து வருகின்றனர்.
விவசாயியான சாவித்ரி தாகூர் (46), கடந்த 2014-ம் ஆண்டு தார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தற்போது மீண்டும் 2024 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 2,18,665 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது மோடியின் அமைச்சரவையிலும் உள்ளார். எனினும் ஒன்றிய அரசின் திட்டத்தை சரியாக எழுத தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.