நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பா.ஜ.க கூட்டணி 292 இடங்களையும் பிடித்தது. பா.ஜ.க தனிபெரும்பான்மையை பெறாததை அடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
இதையடுத்து நேற்று பிரதமர் மோடியுடன் சேர்த்து 72 பேர் புதிதாக ஒன்றிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 12 பேருக்கு கேபினட் மற்றும் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின் போது கூட்டணியில் இருந்த 2 பேருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை 12 பேருக்கு அமைச்சர் பதவியை வழங்கி உள்ளது பா.ஜ.க. கூட்டணி தயவால் ஆட்சி அமைத்ததே இதற்கு காரணம்.
தங்களுக்கும் கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கும் என அஜித் பவார் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் பா.ஜ.க அவர்களுக்கு இணை அமைச்சர் பதவி மட்டுமே கொடுக்கப்படும் என கூறிவிட்டது. மேலும் பதவியேற்பு விழாவும் நடந்து முடிந்துவிட்டது.
இந்நிலையில் தங்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அஜித் பவார் போர்கொடி தூக்கியுள்ளார். இது குறித்து கூறியுள்ள அஜித் பவார், "பிரஃபுல் படேல் கேபினட் அமைச்சராக இருந்தவர். இவருக்கு இணை அமைச்சர் பதவி கொடுத்தால் சரியாக இருக்காது என்று நாங்கள் கருதுகிறோம்.
அதனால் கேபினட் அமைச்சர் பதவி வேண்டும் என பா.ஜ.கவிடம் தெளிவாக கூறிவிட்டோம். இன்றும் சில மாதங்களில் நாடாளுமன்றத்தில் எங்களது எண்ணிக்கை 4 ஆக உயர இருக்கிறது. இதனால் எங்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல், தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கும் தேர்தலில் போட்டியிடாதவர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதும் NDA கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவி ஏற்பு விழா முடிந்து 24 மணி நேரத்திற்குள்ளேயே NDAக்குள் பூகம்பம் வெடிக்க துவங்கிவிட்டது.