நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது. பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிர்பந்தத்தில் உள்ளது.
இதனிடையே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40-க்கு 40 என்று வென்று அசத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு கிடைத்த மக்களின் மிகப்பெரிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாடு முழுவதுமே மக்கள் இந்தியா கூட்டணிக்கு தங்கள் அமோக ஆதரவை இந்த தேர்தலில் கொடுத்துள்ளனர்.
குறிப்பாக பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அனைவரும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்து வரும் நிலையில், பாஜக மாநிலத்திலேயே பாஜகவுக்கு எதிர்ப்பலைகள் எழுந்துள்ளதால் மோடிக்கு பெரும் பின்னடைவை ஏற்பட்டுள்ளது. மக்களின் இந்த பெரும் எழுச்சிக்கு காரணம் இந்தியா கூட்டணியின் ஒற்றுமை மட்டுமே.
இது தங்கள் கோட்டை என்று மார்தட்டிக்கொள்ளும் பாஜக, தான் ஆளும் உத்தர பிரதேசத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதசத்தில் இந்தியா கூட்டணி 45 இடங்களையும் பாஜக 33 இடங்களையும் பெற்றுள்ளது. பாஜகவினருக்கு பெரும் பின்னடைவாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
எனினும் பாஜக தற்போது அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்துள்ளது. இதனை முன்னிட்டு NDA கூட்டணி சார்பில் நாளை மாலை பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார். இதனை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதோடு வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை மாலை நடைபெறும் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். இன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ஜனநாயக விரோதமாகவும், சட்ட விரோதமாகவும் பாஜக, ஆட்சி அமைக்கிறது. இன்று, இந்தியா கூட்டணி அரசாங்கத்தை அமைக்கவில்லை; அதற்காக நாளை நாங்கள் ஆட்சியே அமைக்க மாட்டோம் என்றில்லை. சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம். இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்.
இந்த நிலையற்ற, பலவீனமான ஒன்றிய NDA கூட்டணி அரசை ஆட்சியில் இருந்து விரைவில் வெளியேறும். நம் நாட்டிற்கு மாற்றம் தேவை; நாடு மாற்றத்தை விரும்புகிறது. இந்தியா கூட்டணி காத்திருக்கும். இந்த தேர்தலில் பாஜகவுக்கு விழுந்த அடி, மோடிக்கு எதிரானது. எனவே அவர் இந்த முறை பிரதமர் ஆக தகுதியில்லை. அவருக்கு பதிலாக வேறு யாராவது பிரதமாராக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
நாளை மோடி பதவியேற்கும் விழாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக புறக்கணிக்கிறது. விரைவில் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும்" என்றார்.