நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதே நேரம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர்.
ஆனால் இதனை குறிப்பிட்டு பாஜக ஆதரவாளர்கள் சிலர் 40 தொகுதிகளில் எதிர்க்கட்சி எம்.பிகள் வென்றால் அதனால் எந்த பயனும் கிடையாது. நாடாளுமன்றம் கேண்டீனுக்குத்தான் செல்ல முடியும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு வழங்கிய உரிமையை அறியாமலே கிண்டல் செய்து வருகின்றனர்.
அதே நேரம் அவர்களுக்கு பலரும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்கு என்ன என்பதை கூறி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது அவர்களுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "உயர்சாதியான அவர்கள் சென்றால் நாடாளுமன்றம்! நாம் சென்றால் நாடாளுமன்றம் கேண்டீனாம்!! அவர்கள் ஆசிரியர் பணி செய்த போது “குரு” தெய்வம்.. நாம் ஆசிரியர் பணிக்குச் சென்றால் “வக்கத்தவனுக்கு” வாத்தியார் வேலை!! அவர்கள் முதலிடம் பிடித்தால் மெரிட்.. நாம் முதல் மதிப்பெண் வாங்கினால் “குவாலிட்டியே” போச்சு!!
கடந்த ஆண்டு நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி சிறந்த செயல்பாடுகளில் முதல் இடம் பிடித்தவ்ர் குஜராத்தின் திருமதி.யமி யாஜினிக் , இரண்டாம் இடம் எனக்கு, மூன்றாம் இடம் மராட்டியத்தின் திருமதி.பெளஸியாகான்.. நாங்கள் மூவரும் அந்த சோ கால்டு உயர்சாதியும் அல்ல.. பிஜேபியும் அல்ல!! நாங்கள் மூவருமே எதிர்கட்சிக்காரர்கள்!! நீங்கள் எப்போதும் போல் உங்கள் உயர்சாதி திமிர்தனப் பேச்சைத் தொடருங்கள்.. நாங்கள் மக்கள் பணியைத் தொடருகிறோம்"என்று கூறியுள்ளார்.