ஒன்றிய பாஜக அரசு பாஜக ஆளாத மாநிலங்களில் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும் தமிழ்நாட்டுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் தமிழர்கள் குறித்து அவதூறாகவும் அவமானப்படுத்தும் விதமாகவும் மோடி பேசி வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு வந்தால் புகழ்ந்து தள்ளி வருகிறார்.
இது தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், ஒடிசாவில் பாஜக தேர்தல் பிரசாரத்தின்போது, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளரும் தமிழருமான வி.கே.பாண்டியனை விமர்சிக்கும் நோக்கி, தமிழர்களை திருடர்கள் என்று தொனியில் பேசினார். இவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் கூட, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.
மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர்களும் அதுகுறித்து வாயை திறக்கவே இல்லை. மோடியின் பேச்சுக்கு தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்தபோதிலும், அமித்ஷாவும் தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியிருந்தார். எனினும் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் வழக்கம்போல் அதனை கண்டுகொள்ளமலே இருந்தனர்.
இந்த சூழலில் தற்போது ஒடிசா பாஜக ட்விட்டர் பக்கத்தில், தமிழர்களையும், அவர்களது உணவு முறை பழக்கங்களையும் அவமானப்படுத்தும் நோக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் தென்னிந்திய கலாசார உடையான வேட்டி - சட்டை அணிந்து நபர் ஒருவர் ஹோட்டலுக்கு செல்கிறார். அங்கே அவருக்கு பழைய சாதம் கொடுக்கப்படுகிறது.
அதனை அவர் பாத்திரத்தில் சாப்பிடாமல் ஹோட்டல் ஊழியரிடம் சண்டையிட்டு, இலையில் போட்டு சாப்பிடுகிறார். அப்போது அந்த சாதம் மற்றும் தண்ணீர் வடிகிறது. மொத்தமாக வி.கே.பாண்டியனை தாக்கி வீடியோ வெளியிடும் நோக்கில் ஒட்டுமொத்த தென்னிந்திய உணவு முறை கலாச்சாரத்தையே பாஜக அவமானப்படுத்தியுள்ளது.
பாஜகவின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், இந்த நிகழ்வுக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் வாயை மூடியே இருக்கின்றனர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு மக்கள் மேலும் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் பாஜகவின் இந்த செயலுக்கு தற்போது மேலும் கண்டனங்கள் எழுந்துள்ளது. அந்த வகையில் கேரள காங்கிரஸ் கட்சி, “ஒடிசாவில் தமிழர்களுக்கு எதிராக அமித் ஷா கருத்து தெரிவித்தார். தற்போது தமிழ் மக்களையும், தென்னிந்திய உணவு கலாச்சாரத்தையும் அவமதிக்கும் வகையில் வீடியோ ஒன்றையும் பாஜக வெளியிட்டுள்ளது. வி.கே.பாண்டியனை கேலி செய்ய முயற்சிக்கும் நோக்கில் பாஜக வீடியோ வெளியிட்டுள்ளது.
ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள், அவர் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று ஒடிசா மக்களுக்கு பல தசாப்தங்களாக சேவை செய்து வருகிறார். தமிழ்நாட்டு மக்கள் புத்திசாலித்தனமாக பாஜகவை தூரத்தில் வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை. தமிழ் கலாச்சாரத்தை அவமதித்ததற்காக பாஜக தலைமையை மன்னிப்பு கேட்க வைப்பாரா அண்ணாமலை? அந்த தைரியம் அவருக்கு வருமா?” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
அதே போல் திமுக ஐடி விங், “தமிழ்நாட்டு மக்களையும், தமிழர்களின் பண்பாட்டையும் அவமதிக்கும் பாஜக. ஒடிசா பாஜக வெளியிட்டுள்ள வீடியோக்களில் அவமதிக்கப்படும் தமிழ்நாடு. இதுக்குத்தான் தமிழ்நாட்டில் சங்கிகள் சந்து சந்தாக விரட்டப்படுகிறார்கள்.” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.