தேசிய கல்விக் கொள்கை 2020 :
ஒன்றிய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்வி கொள்கை, மக்கள் மனதில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய கல்வி கொள்கை ஒன்றிய பாஜக அமைச்சரவையால் 29 ஜூலை 2020 அன்று முன்மொழியப்பட்டது. இந்தக் கொள்கை ஆரம்பக் கல்வியில் தொடங்கி உயர் கல்வி வரை பாடங்களின் விரிவான வடிவமைப்பாகும். ஆனால் இந்த மாற்றம் கல்வித்துறையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அறியாத பாஜகவினரின் இந்த கொள்கையினால் மக்கள் மனதில் பல விவாதங்கள் ஏற்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் கல்வி முறையை முழுவதும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது புதிய கல்வி கொள்கை. இந்த தேசிய கல்வி கொள்கையை பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்டாலும் கேரளம், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்கள் இந்த கொள்கையை எதிர்த்து போராடுகிறன. அப்பட்டியலில் நம் தமிழ்நாடும் முன்னிலையில் உள்ளது.
ஒன்றிய அரசு 2020இல் வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தமிழ்நாடு உள்ளிட்ட ஏராளமான மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கைக்கு ஏன் இவ்வளவு சர்ச்சை மற்றும் இந்த சர்ச்சை விவாதத்தை ஏற்படுத்துவது ஏன் என்று மக்கள் மதில் பல கேள்விகள் எழுந்துள்ளது.
2017ஆம் ஆண்டு இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்துரி ரங்கன் தலைமையிலான குழு ஒன்று ஒன்றிய பாஜக அரசின் உத்தரவின் பேரில் இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டது. 2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியன்று இந்த குழு தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கையில், சில அம்சங்கள் தமிழ்நாட்டில் மற்றும் பல மாநிலங்களிலும் பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது.
அதில் இடம்பெற்றிருந்த மும்மொழி கொள்கையானது இந்தி பேசப்படாத மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தங்கள் தாய்மொழி மற்றும் ஆங்கில மொழியை கட்டாய பாடமாகவும் ஏதேனும் ஒரு இந்திய மொழியை விருப்பபாடமாகவும் கற்கவேண்டும் என்பதாகும். இதன் மூலம் விருப்பபாடத்தை தேர்வு செய்யும் அந்த மாணவர் இந்தி மொழியை தேர்வு செய்யும் கட்டாயத்திற்கு எடுத்துச்செல்வர். பாஜக அரசின் மறைமுகமான இந்த நோக்கம் இந்தி மொழியை இந்தி பேசாதவர்கள்மீதுதிணிப்பதே ஆகும். இந்த கொள்கையை ' Three-language formula ' என்றும் கூறுவர் . தமிழகத்தில் இருமொழி கொள்கை பின்பற்றிவரும் நிலையில் இந்த மும்மொழி கொள்கை இருமொழி கொள்கையை முற்றிலும் மாற்றி இந்தியை மக்கள் மனதில் தீவிரமாக திணிக்க முயல்கிறது.
மற்றொரு விவாதமானது 3,5,8 ஆம் வகுப்புகளில் பொது தேர்வுகள் நடத்த வேண்டும் என்பதாகும். இதன் மூலம் மாணவர்கள் எந்த அளவுக்கு கற்றிருக்கிறார்கள் என்பதை அறியமுடியும் என்கிறது இந்தக் கல்வி அறிக்கை. அதாவது 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூட பொதுத் தேர்வு கட்டாயம் என்று இந்த கல்வி கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தங்கள் எதிர்கால பள்ளி படிப்பை கூட இடைநிற்றல் செய்ய தூண்டப்படுகிறார்கள் மற்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டிய வயதில் குழந்தைகள் மிகுந்த மன அழுத்தத்துக்குள்ளாகும் சூழல் உருவாகும். இது அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல பிரச்சனைகளில் கொண்டு செல்வதற்கு பாஜக அரசு முயற்சிக்கிறது.
மேலும் தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவர்கள் 9ஆம் வகுப்பு முதல்லேயே தங்கள் எதிர்காலப் படிப்புகளுக்கான வகுப்பு மற்றும் பாடங்களை தேர்வுசெய்து படிப்பதை இந்த வரைவு ஊக்கப்படுத்துகிறது. வெறும் 13 வயதான எட்டாம் வகுப்பை முடித்திருக்கும் ஒரு மாணவரால் எவ்வாறு எதிர்காலப் படிப்பைத் தீர்மானிக்க முடியும்? ஒருவேளை தவறாக தேர்வு செய்தால் அது அவரது வாழ்வை திருப்பி போடக் கூடிய ஒரு முடிவாக கூட மாற வாய்ப்புள்ளது. இவையனைத்தும் அறியாத ஒன்றிய பாஜக அரசு மாணவர்களின் எதிர்கால வாழ்வை அழிக்கவே இந்தத் திட்டத்தை கொண்டுவந்து இருக்கிறது.
புதிய கல்வி கொள்கைகளில் ஒன்று, பாலி, பிராகிருதம், பெர்ஷிய போன்ற மொழிகளை மேம்படுத்த புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றைக் கற்றுத் தரும் அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றும் சமஸ்கிருத மொழி ஊக்குவிக்கப்படும் என்றும் கூறுகிறது. இந்த கொள்கை முழுவதும் சமஸ்கிருதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தரும் ஒரு கொள்கையாக உள்ளது. ஒன்றிய அரசு எல்லா மொழிகளையும் சமமாகப் பார்ப்பதற்குப் பதிலாக, இந்தி, சமஸ்கிருத மொழிகளின் வளர்ச்சிக்கு கூடுதலாக செலவழிப்பது சரியா என்று மக்கள் மனதில் கேள்வி எழும்பியுள்ளது.
தேசிய கல்வி கொள்கை 2020 அறிமுகத்தினால் பலர் பாதிக்க பட்டுள்ளார். புதிய கல்விக் கொள்கையில் பல குறைபாடுகள் இருந்தாலும் ஒன்றிய அரசு அதை ஏற்க மறுக்கிறது. இந்த மாற்றங்களைச் செயல்படுத்துவதன் மூலம் இந்தியக் கல்வி முறை வளர்ச்சி அடையும் என்ற எண்ணத்தை திணித்து வருகிறார்கள். ஆனால் அவ்வனைத்தும் கல்வி சீர்கேடுகளுக்கான ஒரு வழியே. மக்களுக்கு தீங்கு விளைவிப்பதே பாஜகவினர் கூறுகின்ற வளர்ச்சி.
- தாமஸ் ஜெய புஷ்பராஜ். ஜோ