பீகாரில் கடந்த சில ஆண்டுகளாகவே நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜே.டி.யு) பாஜக, ஆர்ஜெடி என கட்சி மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகிறார். கடந்த 2022- ம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்று நிதிஷ்குமார் அறிவித்து பீகார் முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார்.
அதன்பின்னர் நிதிஷ் குமார் லாலு பிரசாத் யாதவ்வின் ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார். இந்த கூட்டணியின் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ்வும் பதவியேற்றனர்.
ஆனால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மீண்டும் கூட்டணி மாறி பா.ஜ.க.வோடு இணைந்து அக்கட்சியின் ஆதரவோடு முதல்வராக பொறுப்பேற்றார். தற்போது நாடாளுமன்ற தேர்தலை பா.ஜ.க.வும் ஜே.டி.யுயும் கூட்டணி அமைத்து சந்திக்கிறது. ஆனால், பீகாரில் பிரதமர் மோடியின் பிரச்சார மேடைகளில் நிதிஷ்குமார் பங்கேற்காதது சர்ச்சையானது.
இந்த நிலையில், தற்போது மோடி மீண்டும் முதல்வராவார் என நிதிஷ்குமார் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா நடந்த பாஜக கூட்டணியின் பிரச்சார கூட்டத்தில் பேசிய நிதிஷ்குமார் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் பிரதமர் மோடி மீண்டும் முதல்வராவார் என்று கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மேடையில் இருந்த பாஜக நிர்வாகிகள், நிதிஷ்குமாரிடம் அது குறித்து கூறியுள்ளனர். ஆனால், அதற்கு நிதிஷ்குமார் நான் சரியாக தானே கூறுகிறேன். தற்போது பிரதமராக இருக்கும் மோடி அடுத்த பதவிக்கு செல்லவேண்டாமா என்று கேள்வியெழுப்பினார். இதனை குறிப்பிட்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதைத்தான் நிதிஷ்குமார் இவ்வாறு கூறுகிறார் என்று இணையவாசிகள் கூறிவருகின்றனர்.