கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி வேட்பாளரும், பாஜகவின் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (JDS) எம்.பியுமாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. கடந்த மாதம் இவர் தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி ரேவண்ணா மீது பெண் கடத்தல் வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் எச்.டி ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான தேவராஜ் கவுடா, பெண் ஒருவரிடம் கடந்த 10 மாத காலமாக பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பாலியல் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பாஜக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும், திரும்ப வந்து போலீஸில் சரணடைய வேண்டும் என மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவரும், பிரஜ்வால் ரேவண்ணாவின் தாத்தாவுமான தேவகவுடா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும், திரும்ப வந்து போலீஸில் சரணடைய வேண்டும். இது எனது கோரிக்கையல்ல, உத்தரவு. என் மீது கொஞ்சமேனும் மரியாதை இருந்தால், பிரஜ்வல் ரேவண்ணா சரணடைய வேண்டும். இதை அவர் மதிக்காதபட்சத்தில் என் கோபத்தையும், எங்கள் குடும்பத்தினரின் கோபத்தையும் எதிர்கொள்ள நேரிடும்" என்று கூறியுள்ளார்.