தேர்தல் நடைபெறும் சமயத்தில் பாஜக மேற்கொள்ளும் அனைத்து பிரசாரங்களிலும் வெறுப்பு பேச்சுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் கடந்த மே 20-ம் தேதி ஒடிசாவில் பிரசாரம் மேற்கொண்ட மோடி, "பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது" என்று பேசினார்.
ஒடிசா மக்களின் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக பேசி, தமிழ்நாட்டையும், தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார் மோடி. இதன்மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே வெறுப்பை விதைக்கும் வகையில் பேசியது அம்பலமாகியுள்ளது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே.பாண்டியன் ஒரு தமிழர் என்பதால், அவரையும் ஒட்டுமொத்த தமிழரையும் குறிப்பிட்டு மோடி கடுமையாக பேசினார்.
மோடியின் இந்த வெறுப்பு பேச்சுக்கு தமிழ் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து தமது மக்கள் குறித்து மோடி அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த வகையில் மோடி மற்றும் அமித்ஷா பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாயிலாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான கண்டன அறிக்கை பின்வருமாறு :
அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற நாட்டின் பிரதமர், குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்தி, மதிக்க வேண்டும். அது சமய சார்பற்ற பண்புகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அமைப்பு சட்டபூர்வ கடமைப் பொறுப்பாகும். ஆனால், பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரை பேச்சுக்கள் மலிவானதாகவும் தரம் தாழ்ந்தும், குடிமக்களை பிளவுபடுத்தி மோதவிட்டு ரத்தம் குடிக்கும் “நர்த்தனம், “ கொண்டதாகவும் அமைந்துள்ளது.
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பாஜக, சங்க பரிவார் ஆதரவாளர்களின் பேச்சுக்கள் மக்கள் ஒற்றுமைக்கு பேராபத்தை ஏற்படுத்தும் செயலாகியுள்ளது. இது குறித்து காலத்தில் தலையிட்டு தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் பல் இழந்தபரிதாப நிலைக்கு சென்று விட்டது.
இந்தச் சூழலில் ஒடிஷா மக்களிடம் பேசி பிரதமர் ஆன்மீக நம்பிக்கையாளர்களின் உணர்ச்சிகளை தூண்டி, தேர்தல் ஆதாயம் தேடும் முயற்சியில், நம்பிக்கையுடனும் பெரும் எதிர்பார்ப்பிலும் தேடி வரும் தொலைந்து போன பூரி ஜெகநாதர் ஆலயத்தின் கருவூலச் சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாக பேசி, தமிழ்நாடு மக்கள் மீது தீரா பழி சுமத்தும் இழிவான செயலில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் பிரதமர் பொறுப்பை உணர்ந்து மோடி நாவடக்கி பேச வேண்டும் என எச்சரிக்கிறது.