தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்டதும் பெண்களது வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் விடியல் பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் அமல்படுத்தியதை அடுத்து பெண்கள் இலவசமாக மகிழ்ச்சியாக பேருந்துகளில் சென்று வருகிறார்கள்.
இதனால், சராசரியாக பெண் ஒருவருக்கு மாதம் ரூ.800 சேமிக்க உதவுகிறது. இந்த பணம் அவர்களது குடும்பத்திற்கு சத்தான உணவுகளை வாங்குவது முதல் பல அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இல்லத்தரசிகள், முறைசாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், மாணவிகள், தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என பல்வேறு தரப்பினரும் விடியல் பயணத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்த திட்டத்தை மகளிர் மட்டுமல்லாது இந்த நாடே பாராட்டி வருகிறது. பல மாநிலங்களுக்கு இந்த திட்டம் முன்னோடியாக அமைந்துள்ளது. இந்த சூழலில் தொடர்ச்சியாகவே இலவச திட்டங்களை கொச்சைப்படுத்தி வரும் பிரதமர் மோடி தற்போது மீண்டும் மகளிர் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ள இலவச பேருந்து திட்டத்தை நாசுக்காக விமர்சித்துள்ளார்.
பிரபல இந்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள பிரதமர் மோடி, ”இலவச பேருந்து பயண திட்டத்தால் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது” என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி சொல்வது போல் மெட்ரோ ரயில்களில் பயணிகளில் எண்ணிக்கை குறைகிறதா? என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை.
ஆண்டுதோறும் மெட்ரோ இரயில் பயணிகள் அதிகரித்துதான் வருகின்றனர். அதிலும் தமிழ்நாட்டில் இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும் கூட சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தேதான் வருகிறது. இப்படி இருக்க மகளிர் மத்தியில் இலவச திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்ற ஒரே காரணத்தினாலும், பா.ஜ.கவின் செல்வாக்கு நாடு முழுவதும் குறைந்துவிட்டது என்ற வயிறு எரிச்சல் காரணத்தாலும், பிரதமர் மோடி இலவச பேருந்து பயண திட்டத்தை விமர்சித்துள்ளார்.
மோடியின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது பேருந்து சேவையால் மெட்ரோ சேவையை பாதிப்பதை நிரூபிக்க முடியுமா? என்று மோடிக்கு அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இதுபோன்ற நிகழ்வுகளை மோடியால் ஏன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேச முடியவில்லை? கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர் சந்திப்பை மோடி நடத்ததற்கு விளக்கம் கொடுங்கள்.
* உலகில் எங்காவது பேருந்து சேவை இல்லாமல் மெட்ரோ ரயில் சேவை மட்டும் இருப்பதை காட்ட முடியுமா?
* பேருந்து சேவையால் மெட்ரோ சேவை பாதிப்பதை நிரூபிக்க முடியுமா?
* பொதுப் போக்குவரத்தில் (மாணவர்கள், வயதானவர்கள், மாதாந்திர பாஸ், முதலியன) பயணத்திற்கான சில வகையான சலுகைகள் வழங்கப்படவில்லையா?
* சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு நிதி தராமல் நிறுத்திவைத்திருப்பது ஏன்?" என்று குறிப்பிட்டு கேள்விகளையும் எழுப்பியுள்ளளார்.