தேர்தல் ஆணையத்தின் மந்தமான நடவடிக்கைகளை, இதுவரை விமர்சிக்காத கட்சி என்றால், அது பா.ஜ.க மட்டுமே.
அதற்கு காரணம், தேர்தல் ஆணையத்தை இயக்குகிற கட்சியே பா.ஜ.க தான் என்கிற விமர்சனமும் ஒரு பக்கம் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது.
எனினும், இந்திய தேர்தல் ஆணையம் என்பது கடந்த 74 ஆண்டுகளாக இயங்கும் ஒரு அமைப்பாகும். இதற்கென அரசியலமைப்பில் தனி இடமே இருக்கிறது. இந்தியாவின் ஜனநாயகத்தன்மையை நிறுவுகிற அமைப்பும் இதுவே.
அத்தகைய தன்மையுடைய அமைப்பில், தற்போது இருக்கிற அரசியல் சார்பு, இதுவரை தங்களுடைய அரசியல் வாழ்வில் கண்டதில்லை என மூத்த அரசியல் தலைவர்கள் விமர்சிக்கும் அளவிற்கு நிலை மோசமாகி வருகிறது.
குறிப்பாக, தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் பா.ஜ.க.வினரை கண்டுகொள்ளாதது மட்டுமல்ல, வாக்காளர்களின் எண்ணிக்கையை கூட வெளியிடாமல் தாமதித்து வருகிறது.
தேர்தல் ஆணையத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியில் இருக்கும் நிலையிலும், வாக்குமுறை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்ட பிறகும், தேர்தலில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் உதவியளிக்கும் வேளையிலும், தேர்தல் ஆணையம் இவ்வாறு அலட்சியமாக செயல்படுவது விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இது குறித்து, ADR அமைப்பு, “வாக்கு சதவீத விவரங்கள் மாற்றப்பட்டுள்ளதால், வாக்காளர்கள் மத்தியில் அச்சமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. எனவே வாக்குப்பதிவு முடிவடைந்த 48 மணி நேரத்திற்குள் இறுதி வாக்குப்பதிவு சதவீதங்களை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.
அது மட்டுமல்லாது, இந்தியா கூட்டணி தலைவர்களும், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்று, உடனடியாக முழுமையான வாக்குப்பதிவு தகவல்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், இதற்கு தேர்தல் ஆணையம் அமைதியையே விடையாக காண்பித்து வருவது சர்ச்சையாகியுள்ளது.