அரசியல்

“தீண்டாமைக்கு எதிராக சமரசம் காணாத நடத்திய போராளி” : டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் தின சிறப்புக் கட்டுரை!

அடித்தட்டு மக்களின் விடுதலைக்காக தம் வாழ் நாளையே அர்ப்பணித்த அற்புதப்பிறவி அண்ணல் அம்பேத்கர் என்றால் அது மிகையல்ல.

“தீண்டாமைக்கு எதிராக சமரசம் காணாத நடத்திய போராளி” :  டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் தின சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாட்டு விடுதலைக்காக, மகாத்மா காந்தி முன்னின்று பாடுபட்டார் என்றால், அடித்தட்டு மக்களின் விடுதலைக்காக, அவர்களும் சமுதாயத்தில் மற்றவர்களோடு உற்றவர்களாய் உலவவேண்டும் என்பதற்காக, தம் வாழ் நாளையே அர்ப்பணித்த அற்புதப்பிறவி அண்ணல் அம்பேத்கர் என்றால் அது மிகையல்ல.

இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர், உயர்கல்வி பெற அமெரிக்கா சென்ற முதலாவது இந்தியர், பட்டியல் இன மக்களுக்காக தனியாக அவர்களின் முன்னேற்றத்திற்காக கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.

தீண்டாமை ஒழியவேண்டும் என்பதற்காக பரோடா மன்னருடன் இணைந்து போராடியவர், பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்; அத்துணைத்துறைகளிலும் வல்லுநர் என புகழப்பட்டவர், அதுமட்டுமா, ஆசிரியராக, இதழாளராக எழுத்தாளராக சமூக நீதிப் போராளியாக, புரட்சியாளராக, எல்லாவற்றுக்கும் மேலாக மனிதாபிமானம் மிக்க ஒருவராகத் திகழ்ந்தவர் பாபா சாகேப் அம்பேத்கர்.

இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் வரைவதற்கான மத்திய அரசின் குழுவில் தலைவராகப் பணியாற்றி உலகமே வியக்கும் வண்ணம், நாட்டின் அரசியல் சட்டத்தை வடிவமைத்த மகான் அண்ணல் அம்பேத்கர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்தக் காலத்தில் அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர் என்பதால் பின்னாளில் ‘மிகச்சிறந்த இந்தியர்’ என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை அறியும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்படியும் ஒரு மனிதரா? என்று. ஆம்! 2012ஆம் ஆண்டு வரலாற்றுத் தொலைக்காட்சியும் சி.என்.என் - ஐ.பி.என். தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய வாக்கெடுப்பில் முதலாவதாக அதிக வாக்குகள் பெற்று அறிவிக்கப்பட்டவர் நம் உயிரணையத் தலைவர்.

பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் தமது 65வது வயதிலேயே இறந்து விட்டாலும் அவரது பணிகள் இந்திய மண்ணில் பரந்து விரிந்து விதைகளாக இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் - அவர் மறைந்து 34 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு வழங்கப்பட்ட ‘பாரதரத்னா’ என்ற விருது.

அவருக்கான அந்த கௌரவத்தின் மூலம் பாரத மண்ணில் உள்ள கீழ்த்தட்டு மக்களும் பெருமைக்கு உள்ளானார்கள். ‘எனக்கான பெருமை எல்லாம், யாருக்காக நான் காலம் காலமாய் பாடுபட்டு வருகிறேனோ, அவர்களுக்கே அது பொருந்தும்’ என்று அம்பேத்கர் கூட கருத்து தெரிவித்துள்ளார் என்பதை கவனிப்பது சாலப் பொருந்தும். தலித்துகளின் விடுதலைக்காக பாடுபட்டவர்.

அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுத்தலைவராக திறம்படச் செயல்பட்டவர் என்பதோடு அவரது பணி நின்றுவிடவில்லை. அவரது வாழ்நாள் முழுவதுமான பணிகள் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவை என்பதை அவரது நீண்ட நெடிய சரித்திரத்தை படிக்கும்போது தெரிகிறது.

நதிநீர் பங்கீட்டுத் திட்டங்கள், பெரிய பெரிய நீராதாரத் திட்டங்கள் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர பணி என்பதற்கான அடித்தளம் வகுத்தது என்றெல்லாம் அவரது செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

காலம் காலமாய் கண்பார்வையில் படாத, குனிந்து, வளைந்து, நெளிந்து வாழ்ந்து வந்த கீழ்த்தட்டு மக்களுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் யார் செயல்பட்டாலும் அதை உடனடியாக கண்டிக்க ஒருபோதும் தயங்காதவர் அண்ணல் அம்பேத்கர்.

அதனால்தான் இன்றைக்கு தமிழகத்தில் அடித்தட்டுமக்கள் வாழும் பகுதிகளிலெல்லாம் அவருக்கு சிலைவைத்து கும்பிடு வதை காணலாம். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே அமைச்சர் பதவி வகித்த அண்ணல் அம்பேத்கர், சுதந்திரத்திற்குப் பின்னர் 9 ஆண்டுகளே உயிர் வாழ்ந்துள்ளார். அவ்வாறின்றி இன்னும் பல ஆண்டுகள் அவர் உயிர் வாழ்ந்திருப்பாரேயானால், இன்றைக்கு ‘தீண்டாமை’ என்ற சொல்லே அகராதியில் இல்லாமல் இருந்திருக்கும் என்று மார்தட்டிச் சொல்லலாம். வாழ்க அண்ணல் அம்பேத்கரின் புகழ்!

banner

Related Stories

Related Stories