ஒன்றியத்தில் பாஜக ஆட்சியமைத்தில் இருந்தே மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்கள் கண்டன குரல்களை எழுப்பி வரும் நிலையில், பாஜக புதிய உத்தி ஒன்றை கையாள எண்ணியது. அதன்படி எதிர்க்கட்சி உறுப்பினர்களை பல்வேறு காரணங்களை கூறி மிரட்டி பாஜகவில் இணைத்து வருகிறது.
தொடர்ந்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, CBI உள்ளிட்ட அரசு அமைப்புகளை பயன்படுத்தி பல நபர்களை மிரட்டி பணம் பறிப்பதோடு, மற்ற அரசியல் கட்சி தலைவர்களை மிரட்டி பாஜகவில் இணைத்து வருகிறது பாஜக. அதன்படி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளை சேர்ந்த பல்வேறு முறைகேடு புகார்களில் தொடர்புடையவர்களை குறிவைத்து மிரட்டி, பாஜக தனது பக்கம் இழுத்துக்கொண்டு வருகிறது.
பாஜகவில் சேர்ந்த பின்னர் அவர்கள் மீது சுமத்தப்பட்ட அதனை முறைகேடு, ஊழல், வன்கொடுமை உள்ளிட்ட பல வழக்குகள் மாயமாகியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் பாஜக வாஷிங் மெஷின் என்று பெயர் வைத்து கிண்டலடித்து வருகின்றனர். அதாவது, பாஜக வாஷிங் மெஷினில், மோடி வாஷிங் பவுடரை பயன்படுத்தி, அழுக்கானவர்களை (பல்வேறு வழக்குகளில் உள்ளவர்கள்) சுத்தமுள்ளவர்களாக மாற்றப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்.
அதனை உண்மை என நிரூபிக்கும் வகையில் பாஜகவில் சேர்ந்த பல குற்றவாளிகளுக்கு பாஜக முன்னுரிமை அளிப்பதோடு, அவர்கள் மேல் உள்ள குற்ற வழக்குகளையும் நீக்கி வருகிறது. இதில் நாடு முழுவதும் பலரும் இருந்தாலும், குறிப்பாக மாற்று கட்சிகளை சேர்ந்த அஜித் பவார், பிரஃபுல் படேல், சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைந்த பிறகு, அவர்கள் மீதுள்ள குற்றங்கள் இப்போது திடீரென காணாமல் போயுள்ளது.
இதனை பிரபல ஆங்கில நாளிதழான The Indian Express, பட்டியலிட்டு குறிப்பிட்டுள்ளது. அதில் 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தொடுக்கப்பட்ட ஊழல் வழக்குகளை பட்டியலிட்டுள்ளது.
அதாவது, காங்கிரஸ் - 10, தேசியவாத காங்கிரஸ் - 4, சிவ சேனா - 4, திரிணாமுல் காங்கிரஸ் - 3, தெலுங்கு தேசம் கட்சி - 2, சமாஜ்வாடி கட்சி - 1, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி - 1 என மொத்தம் 25 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகள் என்று கூறப்படும் நபர்களில் 24 பேர் பாஜகவுக்கு தாவி விட்டனர். இதையடுத்து அவர்கள் மீதுள்ள வழக்குகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பாஜகவில் இணைந்தபிறகு, அதில் 3 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதோடு, 20 வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் அந்த பட்டியலும் வெளியாகியுள்ளது. அதில், தற்போதுள்ள அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பாஜக எம்.பி வேட்பாளர் ஜிண்டால், மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், பாஜக எம்.பி சஞ்சய் சேத் உள்ளிட்ட பலரும் அடங்குவர்.
இந்த பட்டியலை குறிப்பிட்டு தற்போது எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. ஏற்கனவே பாஜக வாஷிங் மெஷின் என்று கூறி விமர்சித்து வரும் நிலையில், தற்போது ஒரு ஆங்கில ஊடகமே பாஜகவின் குட்டை வெளியே கொண்டு வந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.