நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகிறது. அதன்படி அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இந்த சூழலில் ஆந்திராவில் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி, வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதில் ஓங்கோல் தொகுதி வேட்பாளராக மகுந்தா ஸ்ரீனிவாசலூ ரெட்டி பெயரை அறிவித்துள்ளது. இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மதுபான கொள்கை விவகாரத்தில் இவரது மகனான ராகவ் அளித்த வாக்குமூலத்தின்படி தான் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் YSR காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், கடந்த பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகி மார்ச் 16-ம் தேதி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். இணைந்த 10 நாட்களிலேயே இவருக்கு தற்போது சீட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2022-ம் ஆண்டு இவர் மதுபான முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதையடுத்தே இந்த வழக்கு தொடர்பாக இவரது மகன் ராகவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து நடத்தி வந்த விசாரணையில் டெல்லி முதல்வர் உட்பட, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பலரையும் கைகாட்டவே, தற்போது இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 4 முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் இவரது தந்தைக்கு தற்போது பாஜக கூட்டணி கட்சியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான வழக்கில் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டார். பின்னர், இவர் மகன் ராகவா மகுந்தா ரெட்டி நடத்தும் பாலாஜி டிஸ்லரிஸ் நெல்லூர், டெல்லி அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்ரீனிவாசலூ மகன் ராகவா கைது செய்யப்பட்டார். பின்னர் 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மதுபான வழக்கில் ராகவா அப்ரூவராக மாறினார்.
அதன் தொடர்ச்சியாக அவர் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார். இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் தற்போது அரவிந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை தொடர்ந்து 9 முறை சம்மன்களை அனுப்பியது. அதனை தொடர்ந்து நிராகரித்து வந்த நிலையில், கடந்த மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் ரெட்டியின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏ-வுமான கவிதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று ஆம் ஆத்மியை சேர்ந்த டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலட்டுக்கு சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை என்பது குறிப்பிடத்தக்கது.