பெரியார்பற்றியும் - முற்போக்குக் கருத்துகளையும் பாடுவதால் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது அளிக்கக் கூடாதா? பாடகரைப்பற்றி மட்டுமல்ல - தந்தை பெரியாரைப்பற்றியும் அவதூறு பரப்பும் பாடகர்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எசும், பி.ஜே.பி.யும், அண்ணாமலையும் உள்ளனர் என்ற சந்தேகம் எழுகிறது! பற்பல அமைப்புகளிலும் ஊடுருவி காவி மயமாக்கும் குறிப்பிட்ட சக்திகளிடம் எச்சரிக்கை தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கை வருமாறு:
உலகமறிந்த பிரபல இசைமேதை திரு.டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு சென்னை மியூசிக் அகாடமி அமைப்பினர் 2024 ஆம் ஆண்டிற்கான ‘சங்கீத கலாநிதி’ விருதினை அவருக்கு அளிப்பது என்று முடிவு எடுத்து அறிவித்துள்ளனர்.
பாடகர் டி.எம்.கிருஷ்ணா, பெரியார்பற்றி பாடுவதால் அவதூறு பரப்பும் இரு பெண் பாடகர்கள்! :
இவ்விருது டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது என்பதை அறிந்தவுடன், இரண்டு பாடகர்களான ரஞ்சினி, காயத்ரி ஆகியோர், புகழ்மிக்க அவ்வமைப்பின் தலைவர் முரளி அவர்களிடம், ‘‘இவ்வாண்டிற்கான சங்கீத கலாநிதி விருதினை டி.எம்.கிருஷ்ணாவிற்கு அளிக்கவிருக்கும் நிகழ்ச்சியான அந்த அகாடமியின் மாநாட்டில் கலந்துகொண்டு பாடுவதற்கு விருப்பமில்லாததால், தங்களால் கலந்துகொள்ள இயலாது’’ என்று கூறியிருப்பதோடு, ஏன் அந்த சங்கீத மாநாட்டினைப் புறக்கணிக்கிறோம் என்று காரணம் கூறுகையில், டி.எம்.கிருஷ்ணாவிற்கு இப்படி ஒரு ‘சங்கீதா கலாநிதி’ விருது வழங்குவதற்கு, அவருக்குரிய சங்கீத ஞானத்தைப்பற்றிக் கூறி, தகுதியில்லாத ஒருவருக்கு இந்த விருதை அளிப்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று கூற முடியாததால், அவரது தனிப்பட்ட சில கருத்துரிமைகளை, அவர் கையாண்டு வரும் இசைக் கலையை, மனித குலத்திற்குப் பரவலாக்க அவருக்குச் சரியென்று படும் புத்தாக்கங்களைக் கையாளுவதுபற்றி காரணங்களை அடுக்கியதோடு, பெரியார் என்று பலராலும் அறியப்பட்ட ஈ.வெ.ரா.வை பாடகர் டி.எம்.கிருஷ்ணா பெருமைப்படுத்திவரும் அபாயகரமான நடத்தையுள்ளவர் என்று எழுதியுள்ளதோடு, தந்தை பெரியார்பற்றி அவர் சொல்லாத கருத்தை, கற்பனையான அவதூறுகளைக் காரணங்களாக, மியூசிக் அகாடமியின் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்!
ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும் பலமுறை பெரியாரைப் பாராட்டியிருக்கிறதே, அது அபாயகரமானதா? :
அவர்கள் அந்தக் கடிதத்தில் - பெரியார்பற்றி மூன்று அவதூறுகளைத் தேவையில்லாமல் வலிந்து அவதூறு பரப்பவே எழுதி அனுப்பியுள்ளனர். குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குச் செல்லுவது - பாடுவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு ஒருவர் செல்வதோ, கலந்துகொள்ளாமல் இருப்பதோ அவரது உரிமை.
ஆனால், அதற்கான காரணங்கள், சற்றும் பொருத்தமின்றி தந்தை பெரியார் பற்றி உண்மைக்கு மாறான அவதூறுகளைக் கூறி, அந்தக் கடிதம் சென்னை மியூசிக் அகாடமி அமைப்பின் தலைவரான முரளி அவர்களுக்குக் கிடைக்கும் முன்பே, அவரது ஒப்புதல் இன்றி, சமூக வலைதளங்களில் பரப்பி, அது பலராலும் பேசுபொருளாகி, பல லட்சக்கணக்கான பெரியார் பற்றாளர்களின், தொண்டர்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது. இதிலிருந்து இது ஒரு திட்டமிட்ட ஏற்பாடு என்புது எவருக்கும் எளிதில் புலப்படும்.
பிற்போக்குச் சக்திகளுக்குத் துணை போகும் பி.ஜே.பி. அண்ணாமலை! :
இதில் பெரியார் பற்றி இவர்கள் கூறியுள்ள அவதூறுகள் ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் பரப்பப்பட்ட அவதூறுகள் என்ற நிலையில், தற்போது கோவைத் தொகுதியில், மக்களவைக்குப் போட்டியிடும் வேட்பாளரான தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை அவர்கள், அவரது டுவிட்டர் பக்கத்தில் இவர்களை ஆதரித்து, மியூசிக் அகாடமியின் விருது முடிவுக்கு எதிராகப் பேசுவோர் பக்கம் நிற்கிறார். பிரிவினை சக்திகளால் தற்போது மியூசிக் அகாடமி சிதைந்துள்ளது என்று கூற முன்வந்திருப்பது எதைக் காட்டுகிறது?
இவர்கள் இதிலும் ஊடுருவி, அந்த அமைப்பின் மாண்பினைக் குலைத்து, மற்ற பல அமைப்புகளில் எப்படி காவி மயம் ஆக்கியுள்ளார்களோ, அதேபோல், இதனையும் செய்ய ஆயத்தமாகியுள்ளதோடு, அதனால் தந்தை பெரியார்பற்றி, சற்றும் தேவையில்லாமல் அவதூறு களம் அமைத்துள்ளது நன்கு பளிச்சென்று விளங்குகிறது! இத்தகைய சக்திகளிடம் எச்சரிக்கை தேவை!
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.,களின் தூண்டுதலும் - பின்னணியும்! :
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!
எங்கெங்கெல்லாம் நுழைந்து அதனை தங்களது வயப்படுத்தி, மற்றவர்களை அவதூறுக்கு ஆளாக்க முடியுமோ, அதனை செய்யவே இப்படி சிலரைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்களோ என்ற நியாயமான சந்தேகம் சிந்திக்கும் எவருக்கும் எழவே செய்யும்.
தனிப்பட்ட இருவரது கடிதப் போக்குவரத்துக்கு விளம்பரம் தேடுவதுமூலம் யார் அவ்வமைப்பை உடைக்கவோ, சிதைக்கவோ முயலுகிறார்கள் என்பது தெளிவாக எவருக்கும் விளங்கும்! டுவிட்டர் பாய்ச்சல்மூலம், வெளிவந்துள்ள இவர்களைப் போன்றவர்களின் அவதூறுகளுக்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் தூண்டுதல் - பின்னணியே மூலபலம் என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க இயலாததாகும்!