மதவாத, சாதியவாத அரசியல், ஒரு இனத்தையே அழிக்கும் என்பதை பல நிகழ்வுகளின் வழி வெளிக்காட்டி வருகிறது, பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசம்.
அவ்வகையில், பல ஆண்டு காலமாக, இஸ்லாமிய ஆலைகள் அமைந்துள்ள இடம் எவையும், இஸ்லாமியர்களுக்கு உரிய இடம் அல்ல. இந்துக்களுக்கு சொந்தமானது என்ற முழக்கத்தை முன்வைத்து பிளவுவாத அரசியலை செயல்படுத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ்-ம், பா.ஜ.க.வும்.
அதன் விளைவாக, சட்டத்தை தவறாக பயன்படுத்தி ஓரளவு இஸ்லாமிய ஆலைகளை சூரையாடிய பிறகு, இஸ்லாமிய கல்விக்கும் தடை விதிக்க தொடங்கியிருக்கிறது, ஒன்றிய பா.ஜ.க.
இந்தியாவின் கல்வி முறையை பொறுத்தவரை, அதை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்க இயலாது. ஒவ்வொரு மாநில அரசும், தங்களது மாநிலத்திற்கேற்ற கல்வியை வகுத்து, அதில் சிறந்து விளங்கி வருகிறது.
அதிலும், சில கிளைகள் உண்டாக்கப்பட்டு, மதங்களின் அடிப்படையிலான கல்வியுடன் இணைத்து, பொது கல்வியையும் பல கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இந்த முறையை, இந்து, இஸ்லாம், கிறித்தவம், ஜெயின் போன்ற அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் பின்பற்றி வருகின்றனர்.
அதன் எடுத்துக்காட்டுகளாகவே, இந்து மதத்தினை பரப்பும் விதமாக ராமகிருஷ்ணா மிஷன், பாரதிய வித்யா பவன், விவெகானந்த கேந்திரா, வித்ய பாரதி, ஆர்ய சமாஜ் ஆகிய கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
எண்ணிக்கையில், மற்ற மதங்களை வளர்க்கும் கல்வி நிறுவனங்கள், இந்து மதத்தை வளர்க்கும் கல்வி நிறுவனங்களை விட குறைந்த அளவே இருக்கின்றன.
இவை தவிர்த்து, ஒரு படி மேல் சென்று ஒன்றிய அரசின் பள்ளி கல்வி முறையான சி.பி.எஸ்.இ-ல் மனு தர்மம் எனப்படும் பிறப்பின் அடிப்படையிலான பிளவுவாத கொள்கை, இந்து சமயத்தின் உட்கூறுகள், பகவத் கீதை ஆகியவற்றுடன் இந்துத்துவ வாதம் உள்ளிட்டவையும் பாடங்களாக இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ-க்கு பாடத்திட்டங்கள் வகுக்கும் NCERT தான், புதிய தேசிய கல்விக் கொள்கையின் (National Education Policy, 2019) கீழ், நாடு முழுக்க பாடதிட்டங்களை வகுக்கும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதன் வழி, நாடு முழுக்க இந்து சமய கல்வி பரவப்படும் நிலையும் உருவாகியுள்ளது.
இவ்வாறு ஒன்றிய அரசின் கல்வி ஒரு குறிப்பிட்ட மதத்தின் வளர்ச்சிக்கு பயன்படும் நிலையிலும், இது இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கு கேடு என்ற ஒற்றை குரல் கூட எழுப்பாத அலகாபாத் நீதிமன்றம், அண்மையில் அளித்திருக்கிற தீர்ப்பு சர்ச்சையாகியுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும், மதராசா கல்வி சட்டம் (இஸ்லாமிய கல்வி சட்டம்), நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்ற தீர்ப்பு தான் அது.
இதன் வழி, மிகக்குறைந்த கல்விக் கட்டணத்தில் பயின்று வந்த சுமார் 26 இலட்சம் மாணவர்களின் எதிர்காலமும், 10,000-க்கும் அதிகமான ஆசிரியர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதற்கு சரியான தீர்வு காணும் இடத்தில் இருக்கிற, உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசும், கல்வி வளர்ச்சியில் கவனம் கொள்ளாத காரணத்தால், என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளது.
இந்நிலையில், அவசர அவசரமாக வழங்கப்பட்ட அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு, மதச்சார்பற்ற தன்மையை முன்மொழிவதையே நோக்கமாக வைத்திருப்பின், அது ஏன் ராமகிருஷ்ணா மிஷன் குறித்தான கேள்வியை முன்வைக்கவில்லை.
ராமர் கோவில் ஒரு குறிப்பிட்ட மத நிகழ்வாக நடத்தப்படாமல், ஒட்டுமொத்த இந்தியாவின் விழாவாக, அரசு விழாவாக கொண்டாடப்பெற்ற போது, மதச்சார்பின்மை குறித்து வருந்தாது ஏன்? என்ற கேள்விகள் வலுக்கத் தொடங்கியுள்ளன.