ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம், பாஜக ஆட்சியில் இருந்த இத்தனை ஆண்டுகளும் (2022 வரை) பாஜக மட்டும் சுமார் ரூ.5,272 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட மொத்த நிதியிலிருந்து 58% ஆகும். எனவே தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். மேலும், 2019-ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் SBI வங்கி தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டும் என்றும், நன்கொடை கொடுத்தோர் விவரங்களைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் மார்ச் 13 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
ஆனால் SBI வங்கி தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட ஜூன் மாதம் வரை கால அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால் SBI தொடர்ந்த வழக்கை ரத்து செய்து, 15-ம் தேதி மாலைக்குள் விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த நாளே தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரத்தை SBI வங்கி தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது.
அந்த விவரங்களை மார்ச் 14-ம் தேதி தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டது. இதில் மொத்த நிதியில் பாஜக மட்டுமே குறிப்பிட்ட பல பங்கை பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக பாஜகவுக்கு நன்கொடை கொடுத்த அனைத்து நிறுவனங்களிலும், அந்த நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது.
இதனால் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் தேர்தல் பத்திர விவகாரத்தில் இன்னும் 9 ஆயிரம் தேர்தல் பத்திரங்களின் விபரங்களை வெளியிடவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை, தகவல் உரிமை சட்ட அலுவலர் அஜய் போஸ் வெளியிட்டுள்ளார்.
அதாவது மொத்தம் விற்கப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திரங்களின் விபரங்களை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார். அதன்படி இவருக்கு கடந்த மார்ச் 14-ம் தேதி தேர்தல் நன்கொடை பத்திரங்களின் விபரங்கள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி பதில் அளித்திருந்தது. அதில் தேர்தல் பத்திர விற்பனை தொடங்கிய நாள் முதல், கடந்த ஜனவரி 25ஆம் தேதி வரையிலான தகவல்கள் இடம்பெற்றிருந்தது.
அதன்படி கடந்த ஜனவரி 25ஆம் தேதி வரை 28,030 தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், விற்பனையான பத்திரங்களின் மொத்த மதிப்பு ரூ.16518,10,99,000 என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் 18,871 தேர்தல் பத்திரங்களின் விபரங்களை மட்டுமே இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதனால் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 9,159 தேர்தல் நன்கொடை பத்திரங்களின் விபரங்கள் எங்கே? என கேள்வியும் எழுந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அஜய் போஸ் வலியுறுத்தியுள்ளார்.