ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இறுதியாக கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. இந்த கூட்டணி கடந்த 2018-ம் ஆண்டு உடைந்தது.
மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதால் அங்கு ஆட்சி கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட சட்டப்பிரிவு 370 மற்றும் 1954ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரால் செயல்படுத்தப்பட்ட 35ஏ என்ற சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது.
மேலும், சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, பின்னர் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவரின் அனுமதியோடு அது நிறைவேறியது. அதோடு நிற்காமல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஒன்றிய அரசு அறிவித்தது.
அதன் பின்னர் அங்கு தற்போதுவரை சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்தது. சட்டப்பிரிவு 370 குறித்த வழக்கில் உச்சநீதிமன்றமும் அங்கு மீண்டும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தவேண்டும் என்று கூறியது. இதனால் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு, ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் என கருதப்பட்டது.
ஆனால், இன்று நாடாளுமன்ற தேர்தல் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமையை பாஜக அரசு கடந்த பல ஆண்டுகளாக மறுத்து வருவது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.