இந்தியாவின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலம் பஞ்சாப். இதற்கு மேற்கில் பாகிஸ்தானும்; வட கிழக்கில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் காஷ்மீரும்; தென் கிழக்கில் அரியானாவும்; கிழக்கில் ராஜஸ்தானும் அமைந்துள்ளது.
இத்தகு முதன்மைத்துவம் பெற்ற எல்லைப்பகுதியான பஞ்சாப்பில், 82.5% நிலம் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. வளமிகுந்த வண்டல் மண் நிலம் என்பதால் பஞ்சாபை அடைய, முற்காலத்தில் கிரேக்க மன்னர் அலெக்ஸாண்டர், காந்தார அரசர்கள், மவுரியர்கள், குப்தர்கள், காபூல் சாகிப்கள், துருக்கியர்கள் என பல அரசர்கள் ஆட்சி செய்ய துடித்து வந்தனர்.
அவ்வரிசையில், இந்தியா விடுதலையடைந்த பின், பா.ஜ.க.வும் இணைந்துள்ளது. எனினும், அக்கட்சியால் இன்றளவும் பஞ்சாப்பில் காலூன்ற இயலவில்லை.
1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கான நிலப்பரப்புகள் பிரித்தளித்து விடுதலை வழங்கப்பட்டது.
அவ்வாறு, நிலப்பரப்பு பிரித்தளிக்கப்பட்டபோது, ஜம்மு - காஷ்மீர் நிலப்பரப்பை கைப்பற்ற இந்திய அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும், சீன அரசுக்கும் கடும் முரண் நிலவியது.
அத்தகைய முரண்பாடு, பஞ்சாப்பிலும் நிலவியது. பஞ்சாப்-ஐ பொறுத்தவரை, இந்தியாவிலும் பஞ்சாப் உண்டு. பாகிஸ்தானிலும் பஞ்சாப் உண்டு. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், பாகிஸ்தானில் தான் பெரும் பகுதி பஞ்சாப் உண்டு, அதற்கு மேற்கு பஞ்சாப் என்று பெயர். இந்தியாவில் இருக்கும் பஞ்சாப் குறுகிய அளவினதே.
எனினும், இந்தியாவின் பஞ்சாப் மண்ணை சேர்ந்தவர்கள், இந்திய தேசப்பற்று மிகுந்தவர்கள். ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும் என உறுதி பூண்டவர்கள். அந்த உறுதிக்கான உதாரணமாக பகத் சிங் என்ற ஒற்றை மனிதனை கூறலாம்,
அகவே தான், இந்திய மாநிலங்களின் பட்டியலில், பரப்பளவில் 20ஆவது இடத்திலும், மக்கள் தொகையில் 16 ஆவது இடத்திலும் இருக்கும் பஞ்சாப், இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
மோடி அரசால் கொண்டு வரப்பட்ட, மூன்று வேளாண் சட்டங்கள் மக்களுக்கானது அல்ல என்பதை உணர்ந்து, அதனை செயலிழக்க வைத்ததில், பஞ்சாப் விவசாயிகளின் பங்கு அளப்பற்கரியது.
அதனைத் தொடர்ந்து இப்போதும், விவசாயிகளுக்கான நிதியாதாரத்தை ஒழுங்கு படுத்த, பல தடைகளை கடந்து போராட்ட களத்தில், தங்களை ஆட்படுத்தி வருகின்றனர் பஞ்சாப் மக்கள்.
இத்தகைய போராட்ட குணம் படைத்த பஞ்சாப் மக்களின் அரசும், அம்மக்களை போல தனித்துவம் கொண்டது தான்.
காரணம், வடமாநிலங்கள் என்றாலே காவி என்ற அளவிற்கு, எங்கும் காவி, எதிலும் காவி என அதிகாரத்தையும், பணத்தையும் கொண்டு மக்கள் பிரதிநிதிகளை ஏலம் எடுத்து வருகிறது பா.ஜ.க.
ஆனால், பா.ஜ.க.வின் உப்பு சப்பு எதுவும் இங்கு செல்லாது என ஒவ்வொரு தேர்தல் வழியும் உரக்க உணர்த்தி வருகின்றனர் பஞ்சாப் மக்கள்.
பஞ்சாப் சட்டமன்றத்தை பொறுத்தவரை 117 தொகுதிகள் உள்ளன. அதில் 1952 தேர்தலில் தொடங்கி, 2012 தேர்தல் வரை, காங்கிரஸ் மற்றும் அகாலி தளத்திற்கிடையில் தான் கடும் போட்டி நிலவியது.
ஆனால், அகாலி தளமும், பா.ஜ.க.வின் அரசியல் நோக்கமான வலதுசாரி நோக்கங்களை முன்வைப்பதால், கடந்த இரு தேர்தலிலும் கணிசமான பின்னடைவு அடைந்துள்ளது.
அதற்கு மாற்றாக, ஆம் ஆத்மி கட்சி 2017 ஆம் ஆண்டு போட்டியிட்ட முதல் தேர்தலில், 20 இடங்களையும், கடந்த 2022 தேர்தலில் 92 இடங்களையும் பெற்று ஆட்சியை தன்பக்கம் திசை திருப்பியுள்ளது. எதிர்கட்சியாக காங்கிரஸ் செயலாற்றி வருகிறது.
ஆகவே, இம்மாநிலத்தை பொறுத்தமட்டில், ஆளும் கட்சியும் இந்தியா கூட்டணி தான், எதிர் கட்சியும் இந்தியா கூட்டணி தான். இந்த சூழல், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், இந்தியா கூட்டணியின் வெற்றி விழுக்காட்டை, மேலும் உயர்த்தவிருக்கிறது.
கடந்த மக்களவை தேர்தல் முடிவுகளின் படி கூட, பஞ்சாப்பில் உள்ள 13 நாடாளுமன்ற தொகுதிகளில், 7 இடங்களை காங்கிரஸ் கட்சியும், 1 இடத்தை ஆம் ஆத்மி கட்சியும் கைப்பற்றி, பெரும்பான்மையை தக்கவைத்துள்ளது, அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி.
இதன் வழி, இந்தியாவில் வீழ்த்தவே முடியாத கட்சி என்பதை போல் பம்மாத்து காட்டும் பா.ஜ.க-வினரின் முகமூடியை கிழித்தெரியும் மற்றுமொரு மாநிலமாக பஞ்சாப் திகழ்ந்து வருகிறது.