2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின், ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள் ‘தேச துரோகி’களாகவே கருதி தண்டிக்கப்படுகின்றனர்.
அது, பேராசிரியராக இருந்தாலும் சரி; ஊடகவியலாளராக இருந்தாலும் சரி; அறிஞராக இருந்தாலும் சரி; சட்டத்திற்கு முன் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் சரி! தண்டிக்கப்படுவார்கள்.
பா.ஜ.க.வை பொறுத்தவரை இரண்டே பிரிவு தான்.
ஒன்று - பா. ஜ. க.விற்கு ஆதரவாக இருக்கும் கூட்டம்; மற்றொன்று - பா. ஜ. க.வின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிக்கும் கூட்டம்.
இதில், பா.ஜ.க.வை ஆதரிக்கும் கூட்டம் தான், குற்றவாளிகளின் கூட்டமாகவும் உள்ளது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பிரிஜ் பூஷனில் தொடங்கி, பா.ஜ.க.வினர் செய்யாத அட்டூழியங்களும், ஊழல்களும் இல்லை.
குறைந்தது, 75% பா.ஜ.க உறுப்பினர்கள் மீது கொலை, கொள்ளை, பாலியல், ஊழல் உள்ளிட்ட எண்ணற்ற வழக்குகள் உள்ளன. எனினும், ஒன்றிய அரசை பொறுத்தமட்டில், அவர்கள் குற்றம் செய்யாதவர்களே.
ஆனால், இவை எவற்றிலும் பங்கு கொள்ளாமல், இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான பா.ஜ.க.வின் நடவடிக்கைகளை பொதுவெளியில் விமர்சிப்பவர்கள் மீது தான் வழக்குகள் பாய்கின்றன. அவர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்படுகின்றன. சிறைவாசம் தான் வாழ்க்கை என்ற நிலை உருவாகின்றன.
இந்த ஆதிக்க அரசியலை எளிதாக்கும் வகையில், பா.ஜ.க அரசின் வலிமையை கூட்டுவதற்கு உருவாக்கப்பட்ட சட்டம் தான், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்தச் சட்டம் (UAPA), 2019.
இச்சட்டத்தின் வழி, ஒன்றிய அரசின் தேசிய புலானாய்வு முகமை (NIA) கூடுதல் அதிகாரம் கொண்டு, தீவிரவாதம் என்ற காரணம் காட்டி, யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற அதிகாரம் பெற்றது.
இதனால், பா.ஜ.க அரசு, தங்களின் எதிரிகளாக எண்ணும் வெவ்வேறு துறைகள் சார்ந்த சமூக சீர்திருத்த எண்ணம் கொண்டவர்ளை, தீவிரவாத தொடர்பு உள்ளவர்கள் என்று பொய் வழக்கு போட்டு, ஆதாரமற்ற நிலையிலும் சிறைக்கு தள்ளியது.
அவ்வாறு சிக்கிக்கொண்டவர்கள் தான், முன்னாள் பேராசிரியர் சாய் பாபா, ஜம்மு - காஷ்மீர் ஊடகவியலாளர் ஆசிஃப் சுல்தான் உள்ளிட்ட ஆயிரக்கான நிரபராதிகள்.
குறிப்பாக, சாய் பாபா, ஆசிஃப் சுல்தான் ஆகியோருக்கு எதிராக எவ்வித சான்றுகளும் இல்லாத நிலையில், தீவிரவாத தொடர்புள்ளவர்கள் என காரணம் காட்டப்பட்டு சில ஆண்டுகள் சிறையில் கழிக்கும் நிலை உருவானது. பின், நீதிமன்றங்களின் நடவடிக்கைகளால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால், அங்கும் தன் வேலையைக் காட்டி, காரணமற்று மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார் ஆசிஃப் சுல்தான். இந்நடவடிக்கைகள், மக்களின் அடிப்படை உரிமைக்கு எதிராக இருக்கும் நிலையிலும், பா.ஜ.க.வின் பாசிச போக்கு அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.
அதற்கான எடுத்துக்காட்டையும், அவர்களே வெளியிட்டுள்ளனர். ஒன்றிய அமைச்சக தகவல் படி, 2019 - 2021 காலகட்டத்தில்,UAPA சட்டத்தால் 1,133 பேர், 1 - 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
அதிலும் அதிகப்படியான கைதுகள், பா.ஜ.க. ஆளும் மணிப்பூர், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் தான் நடக்கிறது என்ற தகவல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.