பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதுதவிர கேரளாவுக்கு ஒன்றிய அரசு போதிய அளவு நிதிவழங்கவில்லை என்றும் குற்றசாட்டை மாநில அரசு தெரிவித்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரள அரசு திட்டத்தின் பெயர் இந்தியில் வைக்க மறுத்ததால் ஒன்றிய அரசு நிதியை நிறுத்திவிட்டதாகக் கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் குற்றம் சாட்டியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
ஒன்றிய அரசு உரிய நிதியை வழங்காமல் இருந்த காரணத்தால், வெளியில் இருந்து கடன் வாங்க கேரள அரசு முயன்றது. அனுமதிக்கப்பட்ட நிதிவரம்புக்குள் கடன் வாங்கும் கேரள அரசின் இந்த முடிவுக்கும் ஒன்றிய பாஜக அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. இதன் காரணமாக கேரளாவுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், பொது வெளியில் இருந்து கடன் வாங்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
கேரளா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில், ஒன்றிய அரசுடன் நடத்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. மற்ற மாநிலங்களுக்கு வழங்கியுள்ள நிதியை கூட தங்களுக்கு வழங்கவில்லை என்று புகார் தெரிவித்தார். மேலும், அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக 3.48 லட்சம் ஒன்றிய அரசு கடன் வாங்கி உள்ளது. அதே நேரத்தில் நிதிவரம்புக்குள் இருந்து கொண்டு கடன் வாங்க கேரளாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 13,600 கோடி ரூபாய் கடன் வாங்க அனுமதி வழங்க ஒன்றிய தயாராக இருப்பதாகவும் , ஆனால், ஒன்றிய அரசுக்கு எதிரான வழக்கை கேரளா திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார். இதற்கு கேரள அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் நீதிமன்றமே வழக்கை விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. . இதனை தொடர்ந்து வழக்கு மார்ச் ஆறாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.