இந்த ஆண்டு மே மாதத்தோடு ஒன்றிய அரசின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், ஒன்றிய பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யபடும் இறுதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட் என்றாலும் தேர்தலுக்கு முன்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என பல்வேறு தரப்பினர் விமர்சித்தனர்.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக அரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்த வெள்ளை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். ஆனால், அந்த அறிக்கையில் எந்த தரவுகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை குறை சொல்லும் செயலை மட்டுமே ஆளும் கட்சி செய்கிறது என்று திமுக எம்.பி கலாநிதி வீராசாமி விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி கலாநிதி வீராசாமி, "ஜவகர்லால் நேரு காலத்தில் பசுமை புரட்சி உருவாக்கப்பட்டது. நரசிம்ம ராவ் ஆட்சி காலத்திலும், மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலும் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி கண்டது. அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இது பெருமளவுக்கு சரிந்தது. பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் பொருளாதாரம் தெரியாது என்பதை உங்களது கட்சியில் உள்ள சுப்ரமணிய சாமியே தெரிவித்துள்ளார். பத்து ஆண்டுகள் குறித்த வெள்ளை அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலை, வரி, பணமுடக்கம் குறித்து எந்த தகவலும் இல்லை.
பெரும் தோல்வியடைந்த பண முடக்க நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கையில் எந்த தகவலும் இல்லை.பத்து ஆண்டுகளில் செஸ் வரி பெருமளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மீது வரிகள் தவிர, பெட்ரோல் விலையில் 20 ரூ செஸ் வரியை முழுமையாக ஒன்றிய அரசு எடுத்துக் கொள்கிறது.நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை குறை சொல்லும் செயலை மட்டுமே ஆளும் கட்சி செய்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக எதுவும் பேசுவதில்லை" என்று கூறியுள்ளார்.