பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியின் இறுதி நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதன் பகுதியாக, கடந்த அமர்வில், நாட்டின் நீர்நிலை பற்றிய அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்டது.
அதன் படி, பாஜக ஆளும் மாநிலங்களான அசாம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீர் மாசு அதிகளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக, மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் இரும்பு (iron), நைட்ரேட், உப்புத்தன்மை போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன என்றும் அறிவித்துள்ளது.
இந்திய அளவில் சுமார் 19 ஆயிரத்துக்கும் அதிகமான கிராம மக்கள், குறிப்பாக *பா.ஜ.க ஆளும் அசாம் (6,749) மற்றும் ராஜஸ்தான் (8,840) மாநிலங்களை சேர்ந்த மக்கள், மாசடைந்த நீரை உட்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*
இது குறித்து மாசு நீரை உட்கொள்ளும் கிராம மக்கள், “மாசுபட்ட நீர்நிலைகளிலிருந்து தற்காலிகமாக காத்துக் கொள்ளும் விதமாகவே பா.ஜ.க அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அவையும் சுமார் 5% கிராமங்களில் தான் செயல்முறையாக்கப்பட்டுள்ளன. பெரிவாரியான கிராமங்கள் கிடப்பில் தான் போடப்பட்டுள்ளன. இது மக்களின் உடல்நலத்தில் பேராபத்து உண்டாக்குவதாக இருக்கிறது” என தெரிவித்துள்ளனர்.
இதன் வழி, ஒன்றிய மற்றும் மாநில அதிகாரம் என இரண்டையும் கையில் வைத்துள்ள பா.ஜ.க, ‘தூய்மை இந்தியா’ என்ற பொய் வாக்குறுதியை பரப்பி வருகிறதே தவிர, செயலில் ஏதும் இல்லை என்பது தெளிவுபட்டுள்ளது.
இவ்வாறான சூழலில், நீர்நிலைகளில் மாசு ஏற்படுத்துபவர்களை காக்கும் வகையில் தண்டனை குறைப்பு மசோதாவை [நீர் மாசு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) திருத்த மசோதா] முன்மொழிந்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.