நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநில அரசும் அதன் மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகின்றன. அவ்வரிசையில், பாஜக ஆளும் குஜராத்திலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
அக்கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ துஷார் செளத்ரி, “அதானியிடம் பெறும் மின்சாரத்திற்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது?” என கேட்டார்.
அதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் கனுபாய் தேசாய், “2007ஆம் ஆண்டு அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தின் படி, அடுத்த 25 ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 2.62 நிர்ணயிக்கப்பட்டது. இது போன்ற ஒப்பந்தம் டாடா மற்றும் இஸ்ஸார் குழுமத்துடனும் கையெழுத்திடப்பட்டது,” என விடையளித்தார். மேலும் “நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, 2018 மற்றும் 2022 ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் திருத்தி செயல்முறைப்படுத்தப்பட்டன” என தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ அமித் சவ்டா, “அதானியுடனான 2007 ஒப்பந்தத்தின் படி, அடுத்த 25 ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 2.62 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 2022 ஆம் ஆண்டில் யூனிட்டுக்கு ரூ. 7.18 மற்றும் 2023 ஆம் ஆண்டு யூனிட்டுக்கு ரூ. 5.33 என அதிகப்படியாக தொகை செலவிடப்பட்டுள்ளது குஜராத் பாஜக அரசு.”
“மின்சாரத்திற்கு செலவிடப்படும் நிதியில், மக்களின் வரிப்பணம் அடங்கியுள்ளது. பா.ஜ.க விற்கும் அதானி குழுமத்திற்கும் இடையிலான சார்பகத்தன்மை காரணமாக, இரண்டு ஆண்டுகளில் ரூ. 8,265 கோடி கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது ஏற்க கூடியது அல்ல,” என குற்றஞ்சாட்டினார்.
மேலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், அரசால் மின்சார உற்பத்தி செய்ய இயலாத நிலை நீடிக்கிறதா? என்ற கேள்வியும் சட்டமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்டது.
அதானி குழுமத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டு கூடுதல் சலுகைகள் வழங்கி வருவது, குஜராத்தில் மட்டுமல்லாது பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பாஜக அரசு மெளனத்தையே பதிலாக அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.