அம்ரித் கால் (amrit kaal) என்ற முழக்கத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து முதன்மை படுத்தி வருகிறது. அம்ரித் கால் என்றால், நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றுவது என்று பொருள். ஆனால் அப்படிதான் பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் மக்களின் பதிலாகவே இருக்கிறது.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை தொடக்கிவைத்து பேசிய குடியரசு தலைவர் உரையில், ’அம்ரித் கால்' என்ற வார்த்தை இடம் பெற்றது. இதற்கு எதிர்கட்சி தலைவர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சித்தார்த்த சங்கர் ராய், “ இந்திய மக்கள் தொகையில் 40% மக்களின் பணமதிப்பிற்கு நிகரான செல்வத்தை 1% பணக்காரர்கள் பெறுகிறார்கள் என ஐ.நாவின் வளர்ச்சி திட்ட அறிக்கை, Oxfam சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், 35 % மக்களின் வருமானம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசு கூறும் ‘அம்ரித் கால்’ எங்கே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் திருச்சி சிவா MP,"நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களில் 71% மசோதாக்கள் உரிய ஆய்வுகள் இன்றி நிறைவேற்றப்படுகிறது. ஒன்றிய அரசின் மோசமான திட்டத்தால்தான் அண்மையில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட 20 நாடுகளில் தனி நபர் வருமானம் குறைவாக உள்ள நாடாக இந்தியா உள்ளது.”என தெரிவித்துள்ளார்.
மேலும், “நாட்டில் 2 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவிக்கிறது. பின்பு எதற்கு 81 கோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டிய தேவை உள்ளது?” என ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி அமரேந்திர தாரி சிங் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோன்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஒன்றிய அரசை விமர்சித்து வருகின்றனர்.