தமிழ்நாட்டில் பாஜக அத்தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு குற்றங்கள் மட்டுமல்ல, கேளிக்கையான விஷயங்களும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக தான் ஒரு கட்சியின் தலைவர் என்பதை கூட மறந்து, பல சம்பவங்களில் அத்துமீறியும், உளறியும் வருகிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசை பற்றி விமர்சிக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்து வருகிறார்.
மேலும் தவறான டேட்டாகளையும் உதாரணமாக வைத்துக்கொண்டு பேட்டி அளித்து வருகிறார். அண்ணாமலையின் பேச்சுக்கு சில நேரங்களில் கண்டனங்கள் எழுந்தாலும், சில நேரங்களில் அவரது பேச்சு வேடிக்கையாக இருக்கும். இதனால் அண்ணாமலைக்கு எதிராக பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருவர்.
தற்போதும் அதுபோன்ற வேடிக்கையான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் அண்ணாமலை. நேற்று செய்தியாளரை சந்தித்த அண்ணாமலை, “2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும். அரசு வேலை இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை நிச்சயம் வரும்” என்று தெரிவித்தார். இவரது பேச்சுக்காக பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஒரு ஒப்பீட்டுக்கு - தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்... BJP கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று...
அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-ல் ஒருவருக்கு அரசு வேலையாம்! அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா?” என்று குறிப்பிட்டுள்ளார்.