கடந்த 2022 - 2023-ம் ஆண்டு கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரையான 'பாரத் ஜோடோ நீதி யாத்திரை'யை ராகுல் காந்தி தொடங்கினார்.
இந்த யாத்திரை நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் நடைப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 66 நாட்களில் 110 மாவட்டங்களில் சுமார் 6700 கி.மீ பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த நடைப்பயணம் நடைபெறவுள்ளது. மணிப்பூர், நாகாலாந்தில் யாத்திரை முடிந்ததை அடுத்துக் கடந்த ஜன.18-ம் தேதி ராகுல் காந்தியின் யாத்திரை அசாமிற்கு வந்தது.
பாஜக ஆளும் மாநிலமான அசாமில் பல்வேறு இன்னல்களை சந்தித்து, அங்கிருந்து பீகார் சென்றார். பீகாரில் 3 நாள் நடைபயணம் முடிந்து இன்று காலை ராகுல் காந்தியின் நடைபயணம் மேற்குவங்கத்துக்குள் நுழைந்தது. அங்கு கட்டிஹார் என்ற இடத்தில் இன்று நடைப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு திடீரென அவரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில், ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இந்த தாக்குதலில் ராகுல் காந்திக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று காலை தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது ராகுலின் கார் கண்ணாடி உடைந்தது ஒரு விபத்து என்று தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது சமூக வலைதள பக்கத்தில், “தவறான செய்திகள் பற்றிய விளக்கம்... மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ராகுல்காந்தியை சந்திக்க ஏராளமானோர் குவிந்தனர். இந்த கூட்டத்தில், ஒரு பெண் திடீரென ராகுல் காந்தியின் கார் முன் அவரை சந்திக்க வந்தார், இதனால் திடீரென பிரேக் போடப்பட்டது.
அப்போது பாதுகாப்பு வட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கயிற்றால் காரின் கண்ணாடி உடைந்தது. மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மக்கள் தலைவர் திரு ராகுல் காந்தி நீதி கேட்டுப் போராடி வருகிறார். பொதுமக்கள் அவருடன் உள்ளனர், பொதுமக்கள் அவருக்குப் பாதுகாப்பாக உள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளது.