கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை சட்டங்களில்(CAA ) மாற்றத்தை கொண்டுவருவதாக அறிவித்தது. மேலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும்(NRC) அறிமுகப்படுத்தியது. குடியுரிமை சட்டத்தில் மத ரீதியான பாகுபாடு கட்டப்படுவதாகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான சரத்துக்கள் இருப்பதாகவும் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதனை எதிர்த்து நாடுமுழுவதும் பெரும் போராட்டம் எழுந்தது. இந்த சூழலில் கொரோனா பேரிடர் வந்ததால் அந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் தான் கொண்டுவந்த சட்டங்களையும் ஒன்றிய பாஜக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இதனிடையே வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக CAA சட்டம் நடைமுறை படுத்தப்படும் என ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாகூர் அண்மையில் தெரிவித்திருந்தார். இதனால் இது குறித்து இந்திய அளவில் மீண்டும் பரபரப்பு எழுந்தது. உடனடியாக இதற்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது என பதிலடி கொடுத்தார்.
முதலமைச்சரின் இந்த பதிலடியைத் தொடர்ந்து CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறியிருந்தார். ஆனால், இந்த CAA சட்டம் அமலாக காரணமே இந்த அதிமுகதான் என்பதை எடப்பாடி மறந்துவிட்டார் என்று இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் பாஜக அரசு CAA சட்ட மசோதாவை கொண்டுவந்து மக்களவையில் தங்களுக்கு இருந்த பெரும்பான்மை காரணமாக அதனை நிறைவேற்றியது. ஆனால், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் இருந்த நிலையில், அதிமுகவின் 13 உறுப்பினர்களின் ஆதரவோடு அந்த மசோதா நிறைவேறியது.
மாநிலங்களவையில் CAA சட்ட மசோதாவை 124 உறுப்பினர்கள் ஆதரித்தனர். அவையில் இருந்த 13 உறுப்பினர்களும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அதே நேரம் 99 வாக்குகள் இந்த மசோதாவுக்கு எதிரான விழுந்தன. இந்த சூழலில் அதிமுகவின் 13 உறுப்பினர்களும் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருந்தால் CAAவுக்கு ஆதரவாக 124-13 = என 111 வாக்குகளும், CAAவுக்கு எதிராக 99+13 = என 112 வாக்குகளும் என விழுந்து CAA சட்ட மசோதா தோல்வியை சந்தித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.