ராமர் கோவில் திறப்பு விழாவை ஒட்டி, அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் கிறிஸ்தவ ஆலையத்திற்குள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற முழக்கத்தோடு இந்துத்துவவாதிகள் நுழைந்துள்ளனர். பின், ஆலயத்தின் மேல் ஏறி, சிலுவையில் காவிக் கொடியை பறக்கவிட்டு “ஜெய் ஸ்ரீ ராம்” என முழக்கமிட்டுள்ளனர். இதன் காணொளி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி அதிர்ச்சியடையவைத்துள்ளது.
இதுகுறித்து, பாதிரியார் நர்பு அமலியார், THE QUINT ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில்,
“ஞாயிற்றுக்கிழமை வழிபாடு முடிந்த பின், முழக்கமிட்டுக்கொண்டே ஒரு குழு எங்கள் வளாகத்திற்குள் வந்தது. அந்தக் குழுவில் இருந்த சிலரின் பெயர்கள் கூட எனக்கு தெரியும். நாங்கள் அவர்களை நோக்கி, இது சரி அல்ல! தவறு என்று கூறினோம். எனினும், எங்களை ஒரு பொருட்டாகக் கூட எண்ணாமல், ஆலயத்தின் மேல் ஏறி காவித் துணி கொண்டு சிலுவையை மறைத்தனர்,” என்று தெரிவித்தார்.
”சம்பவத்தைக் கேள்விபட்டு வந்த காவலர்கள், காவிக் கொடியை நீக்கினர். நாங்கள் வழக்கு பதியும்படி கேட்டோம். ஆனால் வழக்கு தேவையில்லை என வழக்கு பதிய மறுத்தனர் காவலர்கள்,” என ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கூடுதலாக, மகாராஷ்டிராவிலும் “ஜெய்ஸ்ரீராம்” வன்முறையைப் பற்ற வைத்திருக்கிறது. மும்பையின் மிரா சாலையில் சென்று கொண்டிருந்த இஸ்லாமியரை அடித்து, அவர்களின் வாகனங்களை நொறுக்கி ஜெய்ஸ்ரீராம் கூறும்படி கட்டாயப்படுத்தும் காணொளிகளும் பரவி வருகின்றன.
இத்தகைய அடக்குமுறை செயல்களுக்கு எதிராக பாஜக ஒன்றிய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.
இணையம் வளர்ச்சியுற்ற காலத்திலேயே இவ்வாறான இன்னல்களை நம் கண்முன் நிறுத்துகிற இந்துத்துவவாதிகளின் சனாதனம், இணையம் இல்லாத காலங்களில் எவ்வளவு குரூரமாக இருந்திருக்கும் என்று எண்ணிக் கூட பார்க்க முடியவில்லை.