காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி எம்பி இந்திய நீதி ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். தற்போது இவர் அசாம் மாநிலத்தில் யாத்திரையில் இருக்கிறார்.
நேற்று அசாம் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்திக்கத் தனது தொண்டர்களுடன் ராகுல் காந்தி சென்றார். அப்போது போலிஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் மீது அசாம் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவை பார்த்து நான் பயப்படவில்லை என ராகுல் காந்தி எம்பி பதிலடி கொடுத்துள்ளார். இன்று அசாம் மாநிலத்தில் உள்ள அபய்புரில் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, "எனக்கு எதிராக ஏற்கனவே 28 வழக்குகள் உள்ளன. மேலும் 25 வழக்குகளைப் பதிவு செய்யுங்கள் நான் தடுக்க மாட்டேன். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவை பார்த்து நான் பயப்படவில்லை. ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில்தான் அசாம் காவல்துறை தனக்கு எதிராக ஒரு போலியான வழக்கைப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவை வெறுப்பால் இயக்க முடியாது. அன்பால் மட்டுமே இயக்க முடியும். அதனால் தான் தானும் தனது கட்சியும் மோடி, அமித்ஷா மற்றும் அசாம் முதலமைச்சர் ஆகியோருக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் இதயத்தில் உள்ள வெறுப்புக்கு எதிரானவர்கள். அசாம் மாநிலத்தில் கலாச்சாரம் மற்றும் மொழியை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க அழிக்கப் பார்க்கிறது. நாக்பூரின் கலாச்சாரத்தை இங்கு திணிக்கப்பார்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.