இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், முகலாயார்கள் ஆட்சியமைத்த 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் பெயரிடப்பட்ட பகுதிகளை, தற்போது மாற்றிக் கொண்டு மாற்றி வருகிறார் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
மதச்சார்பற்ற மக்களாட்சியை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலைப்பிற்கு முற்றிலும் மாற்றான அரசியலில், இந்துத்துவத்தை முன்னிறுத்துவோர் ஆட்சியமைத்தால், என்ன நிகழும் என்பதற்கு விடையாக, பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைந்துள்ளது.
1992 ஆம் ஆண்டு 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘பாபர் மசூதி’ இடிப்பிற்கு பின், இடிக்கப்பட்ட இடம் ‘ராமருக்கு’ உரிமையுடைய நிலம் என்று தக்க சான்றுகள் இல்லாவிட்டாலும், ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ஒப்புதல் அளித்தது உச்ச நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள ஷஹி இட்கா மசூதி அமைந்துள்ள இடம் ‘கிருஷ்ணருக்கு’ உரிமையுடையது என்ற வழக்கும் நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த கிழமை 250 ஆண்டுகள் பழமையான, புழக்கத்தில் இல்லாத மசூதியில் தொழுகையில் ஈடுபட்ட காரணத்திற்காக, 20 வயது இளைஞரை கைது செய்துள்ளது உ.பி. மாநில அரசு. இது போன்ற இறையாண்மைக்கு முற்றிலும் எதிர்மறையாக ஆட்சி நடத்தி வரும் பாஜக, தற்போது ‘ராமர்’ கோவில் திறப்பு விழாவை அரசு நிகழ்வாக மாற்றி, அதற்கான பொருட்செலவுகளை தடையின்றி வழங்கி வருகிறது.
மேலும், பகவத் கீதையை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி, அனைவரையும் படிக்கச் சொல்கிறது. குறிப்பாக, பாஜக நிர்வாகிகள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் இஸ்லாமியர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.
இத்தகைய பின்னணியில் ராமர் கோவில் திறக்கப்படும் ஜனவரி 22 அன்று கல்வி நிலையங்களுக்கு பொதுவிடுமுறை அறிவித்திருக்கிறார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
எழுத்தறிவு விகிதத்தில் தேசிய சராசரியை விட, குறைந்த விகிதம் கொண்டிருக்கும் உத்தரப் பிரதேசத்தில், வளரும் தலைமுறைகளின் எதிர்காலத்துக்கான கோவில்களாக திகழ வேண்டிய கல்வி நிலையங்களையும் பலியெடுத்து வருகிறது பாஜகவின் இந்துத்துவ அரசியல்!