இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடங்கி நேற்றுடன் 139-வது வருடம் ஆகிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நிறுவன நாள் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கர்நாடகாவில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சித்தராமையா, சுதந்திரத்திற்காக சங் பரிவார் அமைப்புகள் ஒரு போராட்டத்திலாவது ஈடுபட்டார்களா என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "ஜனசங்கம், RSS, சங் பரிவார் உள்ளிட்ட எந்த அமைப்புகளும் ஆங்கிலேயருக்கு எதிராக போராடவில்லை. ஆங்கிலேயர் ஆட்சியில்தான் RSS உருவாக்கப்பட்டது. ஆனால், அவர்கள் ஒரு நாள் கூட ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கவில்லை. நாட்டில் சுதந்திரப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தியது. பாஜகவின் பொய்யை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாம் ராமரை வணங்க மாட்டோமா... பா.ஜ.க-வினர் மட்டும்தான் வணங்குகிறார்களா? இராமர் கோயில்களை நாம் கட்டவில்லையா? எங்கள் கிராமத்தில் இருக்கும் கோயில்களில் மக்கள் பஜனை பாடுவார்கள். நானும் அதில் பங்கேற்றுள்ளேன். நாங்கள் இந்து மதத்துக்கு எதிரானவர்கள் இல்லை.
இந்து வேறு... இந்துத்வா வேறு... நான் ஒரு இந்து. நான் எப்படி இந்து மதத்துக்கு எதிரானவனாவேன்?. நான் இந்துத்வாவுக்கும், இந்து மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கும் எதிராகதான் இருக்கிறேன். இந்துத்துவா என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எந்த மதமும் கொலையை ஆதரிக்கவில்லை. ஆனால் இந்துத்துவா கொலை மற்றும் மக்களிடம் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறது." என்றார்.