இந்தியாவில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இறுதி ஆட்டம் நடந்தது. உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதனை காண உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் குவிந்தனர்.
மேலும் பிரதமர் மோடி, அமித் ஷா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உச்சநீதிமன்ற, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், 8-க்கும் மேற்பட்ட மாநில முதலமைச்சர்கள், தொழிலதிபர்கள், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் என பலரும் இந்த போட்டியை நேரில் கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு இந்திய ரசிகர்கள் ஆதரவும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் மோடி மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை தொடர்ந்து, மோடி மைதானத்தின் பெயர் மாற்றப்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா கிண்டலடித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “BREAKING NEWS.. ஆஸ்திரேலிய பிரதமர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு...” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மற்றொரு செய்தி : அகமதாபாத் மைதானத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது... உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் தோல்வியடைந்தது..” என்று குறிப்பிட்டு கிண்டலடித்துள்ளார்.
வழக்கமாக பாஜக செய்யும் சில தவறுகளுக்கு காங்கிரஸ் கட்சியும், நேருவும் தான் காரணம் என குற்றம்சாட்டில் அதில் இருந்து தப்பித்துக்கொள்ள நினைக்கும். அந்த வகையில் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால், மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு வருங்கால சந்ததிக்கு மோடி பெயரில் அமைக்கப்பட்ட மைதானம் என்று தெரியக்கூடாது என்று பாஜக எண்ணும் என்ற வகையில் மஹுவா மொய்த்ரா குறிப்பிட்டு கிண்டலடித்துள்ளார்.
அதோடு பாஜக தற்போது அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை தேவைக்காக பயன்படுத்தி, பாஜகவுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது ஏவி வருவதை சுட்டிக்காட்டிய மஹுவா மொய்த்ரா, இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி தோற்கடித்ததால், அந்நாட்டின் பிரதமர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தும் என்று குறிப்பிட்டு பாஜகவை சீண்டியுள்ளார்.
இவரது பதிவுக்கு பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இவரது பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.